#BREAKING ஜூலை 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 5, 2021, 6:36 PM IST
Highlights

ஜூலை 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். 

10 ஆண்டுகளாக தமிழக சிம்மானத்தில் இருந்த அதிமுக, கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதை அடுத்து தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட அக்கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் வரும் வெள்ளிக்கிழமை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 9 மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதுகுறித்த ஆயத்த பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேபோல் சசிகலா தொடர்ச்சியாக அதிமுக தொண்டர்களுடன் செல்போனில் பேசி வரும் ஆடியோ வெளியாகி வருகிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர்களுடனும் கட்சி தலைமை இதுகுறித்து ஆலோசிக்க உள்ளது. வரும் 9ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் அதிமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!