தமிழக அரசின் இலவச அரிசி திட்டத்திற்கு ஆபத்து.. மத்திய அரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி அலறும் ராமதாஸ்..!

By vinoth kumar  |  First Published Jun 15, 2023, 3:12 PM IST

தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது பாதிக்கப்படும். 


தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது பாதிக்கப்படும் என  ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு அரிசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது பாதிக்கப்படும். மத்திய அரசின் இந்த முடிவு மக்கள்நலனுக்கு எதிரானது ஆகும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தமிழக மாணவர் முதலிடம் பிடித்ததாலே நீட் தேர்வை நியாயம் படுத்த முடியாது.. விலக்கு ஒன்று தான் தீர்வு.. ராமதாஸ்.!

மத்திய அரசுக்கு சொந்தமான மத்தியத் தொகுப்பில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மலிவு விலையில் மாநிலங்களுக்கு வழங்கப் படுகின்றன. இது தவிர மாநிலங்களுக்கு கூடுதலாகத் தேவைப்படும் உணவு தானியங்கள் வெளிச்சந்தை விற்பனை முறையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி ஒரு கிலோ அரிசி ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்டால் (2023-ஆம் ஆண்டு முழுவதும் இந்த அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது) வெளிச்சந்தை விற்பனை முறையில் ஒரு கிலோ அரிசி ரூ.34க்கு விற்கப்படுகிறது. இது தவிர, தனியார் நிறுவனங்களுக்கு இந்திய உணவுக் கழகம் மூலம் ஏல முறையில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதும் வெளிச்சந்தையில் கடந்த சில வாரங்களாக அரிசி மற்றும் கோதுமை விலை  கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், வெளிச் சந்தை விற்பனை முறையில்  தனியாருக்கு  அதிக அளவில் அரிசி மற்றும் கோதுமையை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதை ஈடு செய்ய மாநிலங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வழங்குவதை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நோக்கம் நல்லது என்றாலும் கூட, இதனால் மாநில அரசுகளின் பொது வினியோகத் திட்டம் கடுமையான பாதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பொதுவினியோகத் திட்டத்தின்கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 12 கிலோ முதல் 35 கிலோ வரை இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 35.59 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. இது போதுமானதல்ல என்பதால், தமிழ்நாடு அரசு  மாதத்திற்கு 20 ஆயிரம் டன் (2 கோடி கிலோ) வீதம் ஆண்டுக்கு 2.4 லட்சம் டன் அரிசியை வெளிச் சந்தை விற்பனை முறையில் ஒரு கிலோ ரூ.34 என்ற விலையில் இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வாங்கி வருகிறது. இந்த முறையில் மாநில அரசுகளுக்கு அரிசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி விட்டதால், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 24 கோடி கிலோ அரிசி பற்றாக்குறை ஏற்படும். அதனால், சராசரியாக 10 லட்சம் முதல் 12 லட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்க முடியாத நிலை ஏற்படும்.

வெளிச்சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசுகளுக்கு வழங்கப் படும் அரிசியை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவு நல்ல நோக்கம் கொண்டதாக இருக்கலாம்; ஆனால், இதனால் எந்த பயனும் ஏற்படாது. எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு மாதமும் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஒரு லட்சம் டன் அரிசியை தனியாருக்கு மத்திய அரசு விற்பதாக வைத்துக் கொண்டால், வெளிச்சந்தையில் அரிசித் தட்டுப்பாடும், அரிசிவிலையும் ஓரளவு குறையும் என்பது உண்மை தான்.

ஆனால், அதேநேரத்தில் மாநில அரசுகளுக்கான ஒதுக்கீடு ஒரு லட்சம் டன் குறையும் போது, அதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது வெளிச்சந்தையில் தானாகவே அரிசியின் தேவை அதிகரித்து, விலையும் கணிசமாக உயரும். அதனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய முறையால், வெளிச்சந்தையில் அரிசி விலையை குறைக்கவே முடியாது. மாறாக, அதிக விலைக்கு அரிசி வாங்குவதால், மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். வெளிச்சந்தையில் அரிசி வாங்க முடியவில்லை என்றால் இலவச அரிசி வழங்க முடியாது.

மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தாமல், வெளிச்சந்தையில் விலையை குறைக்க ஒரு தீர்வு உள்ளது. வெளிச்சந்தை விற்பனை முறையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியை நிறுத்தாமல், தனியார் நிறுவனங்களுக்கும் அதிக அளவில் அரிசியை வழங்குவது தான் அந்தத் தீர்வு ஆகும். மத்தியத் தொகுப்பில், ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி 262.23 லட்சம் டன் அரிசியும், 226.85 லட்சம் டன் அரைக்கப்படாத நெல்லும் உள்ளன. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் கோடை சாகுபடி அறுவடை தொடங்கி விட்டதாலும், அடுத்த சில மாதங்களில் குறுவை அறுவடை தொடங்கி விடும் என்பதாலும் இப்போதுள்ள அரிசியின் அளவு தேவைக்கும் அதிகமாகும். இதைக் கொண்டு  வெளிச்சந்தையில் அரிசியை விற்பனை செய்து, அதன் விலையைக் குறைக்க மத்திய அரசால் முடியும்.

இதையும் படிங்க;-  அதிக விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு.. இது நாட்டிற்கு வளர்ச்சியா? தலையில் அடித்து கொள்ளும் அன்புமணி.!

எனவே, மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனை முறையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்திய உணவுக்கழகத்திடம் உள்ள  அரிசி மற்றும் கோதுமையை மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தாராளமாக வழங்கி, வெளிச்சந்தையில் அதன் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

click me!