வெளிநாடு செல்லும் அமைச்சர்களின் பட்டியலில் சேரும் தங்கமணி... விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்!

By Asianet TamilFirst Published Sep 27, 2019, 7:04 AM IST
Highlights

 தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் எதிர்கால மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியசக்தி போன்ற  புதுப்பிக்கவல்ல மின்சாரத்தின் பங்கை அதிகரிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
 

வெளிநாடு செல்லும் வரிசையில் அமைச்சர் தங்கமணியும் சேர உள்ளார். விரைவில் அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இக்குழு சென்றது. இவர்களை அடுத்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து சென்றார். அடுத்தடுத்து முதல்வர், அமைச்சர்கள் வெளிநாடு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. சுற்றுலா செல்வதுபோல செல்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.


இந்நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் வெளி நாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருடைய பயணம் குறித்து எதுவும் உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் எதிர்கால மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியசக்தி போன்ற  புதுப்பிக்கவல்ல மின்சாரத்தின் பங்கை அதிகரிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள எரிசக்தி துறை அமைப்புடன்  தமிழக மின் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. அதற்காக மின் துறை அமைச்சர் தங்கமணி அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே செயல்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களைப் பார்வையிட்டு அதை தமிழகத்தில் செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். அமைச்சருடன் அதிகாரிகள் கொண்ட குழுவும் அமெரிக்கா செல்ல இருக்கிறது.

click me!