அமித்ஷா சென்னை வருகையின் போது திடீரென மின்தடை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முக்கியப் பிரமுகர்கள் வருகையின்போதும், பிரதான அரசு நிகழ்வுகளின்போதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் அனைத்து மண்டல மின்சாரப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அமித்ஷா வருகையில் மின்வெட்டு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 12 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள பாஜக அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவர் தனது காரில் ஏறி வெளியே காத்திருக்கும் தொண்டர்களை சந்திக்க வந்தார். அப்போது திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அமித்ஷா காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று காத்திருந்த பாஜக தொண்டர்களை பார்த்து கை அசைத்து சென்றார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மின் வெட்டிற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கும் பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மின்சார வாரியம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் மின் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக திடீரென மின் வெட்டு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மின் ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு
இருந்தபோதும் தமிழக அரசு திட்டமிட்டு மின் வெட்டை ஏற்படுத்தியதாக பாஜக புகார் தெரிவித்தது. இந்தநிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஒரு முக்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. அந்த சுற்றறிக்கையில், முக்கியப் பிரமுகர்கள் வருகையின்போதும், பிரதான அரசு நிகழ்வுகளின்போதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்களைப் மின் வாரிய பொறியாளர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் அதனை உடனே நிவர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்