வீட்டிலிருந்தபடியே குறைகளை தெரிவிக்கும் "1100" திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

By Asianet TamilFirst Published Feb 15, 2021, 2:58 PM IST
Highlights

பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே செல்போனில் 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், இணையவழி மூலமும்  தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். இதற்காக CM HELPLINE CITIZEN என்ற செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். 

பொதுமக்கள் தங்கள் பகுதியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டி, பட்டா வேண்டியும், முதியோர் உதவி தொகை வேண்டி தமிழக அரசுக்கு தங்களது கோரிக்கைகளை இனி வீட்டில் இருந்தபடியே தெரிவிக்கலாம். இதற்கான பிரத்யேக திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி பொதுமக்கள் தங்களது குறைகளை செல்போனில் 1100 என்ற எண்ணிற்கு அழைத்தும், இணையவழியாகாவும் அல்லது இதற்கான பிரத்யேக செயலியான CM HELPLINE CITIZEN வழியாகவும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். 

சிறப்பு அம்சங்கள்:

⚫ சென்னை சோழிங்கநல்லூரில் 12.78 கோடி ரூபாய் செலவில் 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 

⚫ பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்தபடியே 1100 என்ற அலைபேசி எண்ணிற்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். 

⚫ இணையதளம், மின்னஞ்சல்,  CM HELPLINE CITIZEN செயலி வழியாக 24 மணி நேரமும் புகார்களை தெரிவிக்கலாம். 

⚫ பொது மக்களின் புகார்கள் குறித்த துறைகளுக்கு அனுப்பபட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். குறைகளை விரைந்து களைவதற்காக மனுதாரரிடம் ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண் கேட்கப்படும். 

⚫ பொது மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.  

⚫ இத்திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர், தலைமைச் செயலாளர் அனைத்து துறை செயலாளர்களால்  வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

click me!