கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

By Asianet TamilFirst Published Feb 13, 2021, 5:15 PM IST
Highlights

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் ஏழாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் ஏழாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கின. இதையடுத்து, மூன்று கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில், 7818 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன. இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது. நான்காம் கட்ட அகழாய்வில் 5820 பொருட்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 தொல் பொருட்களும் கண்டறியப்பட்டன. ஆறாம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், கீழடி, மணலூர் அகரம் கொந்தகை ஆகிய இடங்களில் 128 கரிம படிமங்களும்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆறாம் கட்ட அகழாய்வில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளம், அகேட், அமெதிஸ்ட் போன்ற விலை மதிப்பற்ற மணிகள், சுடுமண்ணாலான ஆமை வடிவமைப்பு இடம் பெற்ற முத்திரைகள் கிடைத்தன. இந்நிலையில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில் நடைபெறவுள்ள ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.பாண்டியராஜன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கீழடி தொடர்பாக ஏற்கனவே செய்யப்பட்ட விஷயங்கள் (Highlights):*

* மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2014ம் ஆண்டு கீழடியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது

* முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் மத்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்றது

* நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெற்றது

* முதல் மூன்று கட்ட அகழாய்வுகளில் 7818-மும், தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட நான்காம் கட்ட அகழாய்வில் 5820-மும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900-மும் தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது

* ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடியில் 950-ம், கொந்தகையில் 21-ம், மணலூரில் 29-ம், அகரத்தில் 786-ம் என மொத்தம் 1786 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

* கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், கீழடி, மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய நான்கு இடங்களில் 28 கரிம படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

* ஆறாம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளம், அகேட், அமெதிஸ்ட் போன்ற விலை மதிப்பற்ற மணிகள், சுடுமண்ணாலான ஆமை வடிவமைப்பு இடம் பெற்ற முத்திரைகள் கிடைத்துள்ளது

* மாட்டு இனத்தை சேர்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்பு, எடைக்கற்கள், செங்கல் கட்டுமானங்கள், ஒரே முதுமக்கள் தாழியில் 10 எண்ணிக்கைகள் கொண்ட பளபளப்பான சிவப்பு நிற பானைகள் மற்றும் கருப்பு சிவப்பு நிற பானைகளும் கிடைத்துள்ளது 

* ஏழுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், நுண் கற்காலத்தைச் சேர்ந்த மெல் அழகு கத்திகள், நுண் கருவிகள் நீக்கப்பட்ட வெட்டு முகப்புடன் கூடிய செர்ட் வகை மூலக்கூறு, வழவழப்பு தன்மையுடைய கல் மழு ஆகியவையும் கிடைத்துள்ளது 

* 300 மில்லி கிராம் எடையுடைய தங்க நாணயம், கரிம மயமான நெல்மணிகள், செலடான் வகை சீன மட்பாண்ட ஓடு, புகைப்பான்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன

* ஆறாம் கட்ட ஆய்வில் மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்டன. அதில் அகரத்தில் கண்டறியப்பட்ட உறை கிணறு 25க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்டதாகும்.

click me!