பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால்,திமுக,மநீம தொடர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படும். அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Published : Feb 13, 2021, 04:28 PM IST
பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால்,திமுக,மநீம தொடர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படும். அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சுருக்கம்

தற்போது நிலைமை சீராக இருந்து வருவதால், கிராம சபை கூட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  

கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரிய  வழக்குகளில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், பதில்மனு இல்லாமலேயே திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தொடர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபை கூட்டத்தை ஆண்டுக்கு நான்கு முறை ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா ஊரடங்கு விதிகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இதை எதிர்த்தும், கிராம சபை கூட்டங்களை நடத்தவும் அரசிற்கு உத்தரவிடக்கோரி திமுக தரப்பில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு கடந்த ஆண்டு நவம்பர் முதல் வாரமும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மௌரியா இந்த ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரமும் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்ததாகவும், கொரோனா ஊரடங்கு  காரணமாகத்தான் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. 

தற்போது நிலைமை சீராக இருந்து வருவதால், கிராம சபை கூட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்று, பதில் மனுத்தாக்கல் செய்ய ஒரு வார கால இறுதி அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால் பதில் மனு இல்லாமலேயே வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரிவித்து வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!