
கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு எதிராக சிவி சண்முகம் பேசியதாக வதந்தி பரவியதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் டென்சனில் இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலா சிறையில் இருந்து வரும் போது அதிமுக கொடி கட்டிய காருடன் வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருந்தார். அத்தோடு தனிப்பட்ட முறையில் சசிகலாவை மிக கடுமையாக விமர்சித்திருந்தார் அமைச்சர். இந்த நிலையில் அமைச்சர் சசிகலாவை விமர்சித்து அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப ஆரம்பித்தனர். இதனால் பதறிப்போன அமைச்சர் சிவி சண்முகம் தான் பேசாததை பேசியதாக அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சிவி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் அண்மையில் சிவி சண்முகம் விழுப்புரத்தில் வைத்து கொடுத்த பேட்டி உண்மையிலேயே விவகாரமாகிவிட்டது. டிடிவி தினகரனை விமர்சிப்பதாக கருதிக் கொண்டு அளவு கடந்து சண்முகம் பேசிவிட்டார். ஊத்திக் கொடுத்து ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்த குலத்தை சேர்ந்தவர் தினகரன் என்று சண்முகம் பேசியது தான் சிக்கலை அதிகமாக்கியது. சிவி சண்முகம் முக்குலத்தை சேர்ந்தவர். எனவே சண்முகம் டிடிவியை மட்டும் அல்ல அவர் சார்ந்த சமுதாயத்தையே இழிவு செய்துவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு ஆதாரமாக சண்முகம் பேசிய வீடியோவும் வைரலாகியது. இதனால் சண்முகத்திற்கு எதிராக மட்டும் இல்லாமல் அதிமுகவிற்கு எதிராகவும் முக்குலத்தோரை திருப்பும் வேலையில் அமமுக ஐடி விங்க் இறங்கியது. ஏற்கனவே ஒரு முறை இதே போல் வதந்தி பரவிய நிலையில் 2வது முறை சிவி சண்முகத்தின் வீடியோவோடு தகவல்கள் பரப்பப்பட்டதால் பிரச்சனை அதிகமானது. இதனால் வேறு வழியே இல்லாமல் தான் பேசியது தவறு தான் என்றும் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிவி சண்முகம் அறிக்கை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமியின் நேரடி தலையீடு இருப்பதாக சொல்கிறார்கள். சிவி சண்முகம் இப்படி பேசிய வீடியோ உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டுக்காட்டப்பட்டதாகவும், இந்த வீடியோவை வைத்து டிடிவியின் ஐடி விங்க் செய்து கொண்டிருக்கும் வேலையையும் எடப்பாடிக்கு எடுத்துரைத்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சர் சிவி சண்முகத்தை தொடர்பு கொண்டு உடனடியாக வருத்தம் தெரிவிக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாக கூறுகிறார்கள். இதன் பின்னரே அமைச்சர் சிவி சண்முகம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.
அத்தோடு தேர்தல் முடியும் வரை சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்கவும், மேடையில் பேசுவதை குறைத்துக் கொள்ளவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவுறுத்தியுள்ளதாக கூறுப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்கள் அமைச்சர் சிவி சண்முகம் சைலன்ட் மோடில் தான் இருப்பாராம்.