கேப்டன் குடும்பத்தில் 3 பேருக்கு எம்எல்ஏ ஆசை..! கலகலக்கும் தேமுதிக..!

By Selva KathirFirst Published Feb 13, 2021, 2:52 PM IST
Highlights

தேமுதிக தலைவர் விஜயகாந்தி குடும்பத்தைசேர்ந்த மூன்று பேர் எம்எல்ஏ கனவில் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தி குடும்பத்தைசேர்ந்த மூன்று பேர் எம்எல்ஏ கனவில் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டி என்பதில் தேமுதிக இந்த முறை உறுதியாக உள்ளது. அதிலும் அதிமுக கூட்டணியில் இணைய பிரேமலதா அதிக விருப்பம் காட்டி வருகிறார். ஆனால் அதிமுகவோ முதலில் பாஜக, பாமகவிற்கு தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டு பிறகு தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசிக் கொள்ளலாம் என்கிற திட்டத்தில் உள்ளது. ஆனால் பிரேமலதாவோ கடந்த தேர்தலில் தாங்கள் கடைசியில் வந்த காரணத்தினால் குறைவான தொகுதிகளே கிடைத்தது என்றும் எனவே இந்த முறை முதலில் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று வலியுறுத்தி வருகிறார்.

கடந்த ஒரு மாத காலமாகவே அதிமுக தங்களை கூட்டணிப்பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்கிற புலம்பல் தேமுதிக பக்கம் இருந்து அதிகமாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதனை அதிமுக கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கேப்டன் குடும்பத்தில் மூன்று பேர் எம்எல்ஏ ஆகும் கனவில் உள்ளனர். விஜயகாந்திற்கு தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. எனவே விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிட 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.

விஜயகாந்த் போட்டியிடவில்லை என்றால் அவரது மனைவி பிரேமலதா போட்டியிட வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் விரும்புகின்றனர். அதையே பிரேமலதாவும் விரும்புகிறார். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று அவர் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளார். சென்னை விருகம்பாக்கம், ஆம்பூர், குடியாத்தம் என மூன்று தொகுதிகளை பிரேமலதா முதற்கட்டமாக தேர்வு செய்து வைத்துள்ளார். இந்த ஒன்றில் ஏதேனும் ஒரு தொகுதியில் பிரேமலதா களம் இறங்குவது உறுதி என்கிறார்கள். இதே போல் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனும் எம்எல்ஏ ஆசையில் உள்ளார்.

தேமுதிகவில் விஜயபிரபாகரன் தனி டிராக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான நிகழ்ச்சிகள், தேர்தல் பிரச்சார ஏற்பாடுகளை செய்ய தனியாக அவர் ஒரு டீம் வைத்துள்ளார். அந்த டீம், இந்த தேர்தலில் நீங்கள் நிச்சயம் போட்டியிட வேண்டும் என்று விஜயபிரபாகரனை ஏற்றிவிட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடும் விஜயபிரபாகரனும் நாம் ஏன் எம்எல்ஏ ஆகக்கூடாது என்று யோசிக்க ஆரம்பித்துள்ளாராம். எனவே அவர் பங்குக்கு எந்த தொகுதியில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்று ஆராயுமாறு தனது டீமுக்கு உத்தரவிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இதே போல் நீண்ட காலமாக எம்பி கனவில் உள்ள தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீசுக்கு தற்போது எம்எல்ஏ கனவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2009 தேர்தல் முதல் 2019 தேர்தல் வரை மூன்று முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு சுதீஷ் தோல்வி அடைந்துள்ளார். இதே போல் ராஜ்யசபா எம்பி ஆகிவிட அதற்கான தேர்தல் அறிவிக்கப்படும் போதெல்லாம் தீவிர முயற்சியும் செய்து வந்தார் சுதீஷ். ஆனால் எதற்கும் பலன் கிடைக்கவில்லை. அந்த வகையில் அவரது எம்பி ஆசை தற்போது வரை நிராசையாகவே உள்ளது. இதனால் தற்போது எம்எல்ஏ ஆனால் என்ன என்று சுதீஷ் யோசிக்க ஆரம்பித்துள்ளார்.

தனது சகோதரி பிரேமலதா தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் தான் போட்டியிடுவது என்று அவர் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அந்த வகையில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட சுதீசும் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. எனவே கூட்டணிப்பேச்சுவார்த்தையின் போது ஆம்பூர் தொகுதியை பெற்றுவிடும் முடிவில் அவர் உள்ளார் என்கிறார்கள். இப்படி ஒரே குடும்பத்தில் 3 பேர் எம்எல்ஏ ஆசையில் உள்ள தகவல்களை அறிந்து தேமுதிக மேலிட நிர்வாகிகள் கலகலத்து போயுள்ளனர்.

click me!