கர்நாடக முதலமைச்சராக சித்தாரமையா நாளை மறு தினம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த (மே மாதம்) பத்தாம் தேதி நடைபெற்றது இதற்கான வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெற்றது. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடக என்பதால் இந்த மாநிலத்தை தக்கவைத்துக்கொள்ள பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு 10 முறைக்கு மேல் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல காங்கிரஸ் தலைவர்களும் கர்நாடக மாநிலத்தில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தனர். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பாஜகவிற்கு இடையே போட்டி வலுவாக இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இதில் கருத்து கணிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்து முன்னணி பெற்றது.
முதலமைச்சராக சித்தராமையா தேர்வு
இறுதியாக 224 சட்டமன்ற தொகுதி கொண்ட கர்நாடகாவில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக 66 தொகுதிகளை மட்டுமே இந்த தேர்தலில் கைப்பற்றியது. இதனையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சர் யார் என்று கேள்வி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் மட்டுமல்லாமல் கர்நாடகா மாநில மக்களிடம் எழுந்தது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அல்லது டி கே சிவக்குமாரா என்ற போட்டி நிலவியது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இழுபறி நீடித்து வந்தது இதன் காரணமாக இருவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது. அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராகசித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி கே சிவக்குமாரும் பொறுப்பேற்க உள்ளனர்.
பதவியேற்பு விழாவிற்கு செல்லும் ஸ்டாலின்
வருகின்ற 20ஆம் தேதி சித்தராமையா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலினை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார் இதேபோல கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சித்ராமையாவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக மாநிலத்திற்கு நாளை இரவு அல்லது 20 ஆம் தேதி காலையில் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்
''சில நேரத்தில்'' காங்கிரஸ் தலைவர் ''அந்த'' முடிவை எடுப்பார்: டி.கே. சிவகுமார் வைத்த மர்மம்!!