தமிழக முதல்வர் ஸ்டாலின் மனதுவைத்தால் நாட்டுக்கே தடுப்பூசி கொடுக்கலாம்.. ஆம்ஆத்மி தாறுமாறு ஐடியா..!!

By Ezhilarasan BabuFirst Published May 12, 2021, 11:29 AM IST
Highlights

குறிப்பாக, இங்கு அனைத்துமே தயார் நிலையில் உள்ளது. தற்போது தடுப்பூசி உற்பத்திக்காக மட்டும் 35,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அப்படியிருந்தும் தட்டுப்பாடு உள்ளது. 140 கோடி மக்களுக்கு 2 டோஸ் கொடுக்க வேண்டும் என்றால் நமக்கு 280 கோடி டோஸ் வேண்டும்.  

செங்கல்பட்டு பயோடெக் அரசு நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க முடியும் எனவும், இதை உடனே முதல்வர் ஸ்டாலின் உடனடியாக முயற்சிக்க வேண்டும் என தமிழக ஆம்ஆத்மிகட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech)கடந்த ஒன்பது ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. செங்கல்பட்டு அருகே திருமணியில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 600 கோடி முதலீட்டில் மத்திய அரசு நிறுவனமான எச்.எல்.எல் (HLL) பயோடெக், ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை நிறுவியுள்ளது. குழந்தைகளுக்கான முத்தடுப்பூசி, மஞ்சள் காமாலை தடுப்பூசி, வெறிநாய் தடுப்பூசி, தட்டம்மை தடுப்பூசி போன்ற ஒன்பது வகையான தடுப்பூசிகளை 56 கோடியே 40 லட்சம் டோஸ் அளவுக்கு உற்பத்தி செய்யக்கூடிய உலகதரத்திலான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தனை வசதிகள் இருந்தும் மத்திய அரசு அனுமதி கொடுக்காததாலும், போதிய நிதியை ஒதுக்காதால் இந்த நிறுவனம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. 

உற்பத்தி தொடங்காத காரணத்தால் அதி நவீன இயந்திரங்களும் உபகரணங்களும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பயனற்ற நிலையில் போடப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் உற்பத்தி தொடங்குமேயானால் மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும். கொரோனா தடுப்பூசி ஆய்வுக்கும், உற்பத்திக்கும் அனைத்து வசதிகளும் அமைந்துள்ள இந்நிறுவனத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆதரவு அளித்தால், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசியை மிகக் குறைந்த விலையில் வழங்க முடியும். ஆனால், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் தற்போது இந்நிறுவனம் முடங்கியுள்ளது. ஹெச்.எல்.எல் (HLL Biotech) பயோடெக்குடன் ஒப்பந்தம் போட்டு மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆரே (ICMR) தடுப்பூசியை உற்பத்தி செய்யலாம். இங்கு ஒரே மாதத்தில் லட்சக்கணக்கான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. குறிப்பாக, இங்கு அனைத்துமே தயார் நிலையில் உள்ளது. 

தற்போது தடுப்பூசி உற்பத்திக்காக மட்டும் 35,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அப்படியிருந்தும் தட்டுப்பாடு உள்ளது. 140 கோடி மக்களுக்கு 2 டோஸ் கொடுக்க வேண்டும் என்றால் நமக்கு 280 கோடி டோஸ் வேண்டும். தற்போது வரையில் 14 கோடி பேருக்கு தடுப்பூசியை போட்டுவிட்டோம். இதில், இரண்டு டோஸ்களையும் போட்டவர்களின் எண்ணிக்கையும் அடக்கம். இந்த வேகத்தில் சென்றால் தடுப்பூசி போட்டு முடிக்கவே 2 ஆண்டுகள் ஆகும். தடுப்பூசி தேவைகள் அதிகரித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செங்கல்பட்டு ஹெச்.எல்.எல் (HLL Biotech) பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆம்ஆத்மி கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
 

click me!