முதல்வரைக்கூட கலந்தாலோசிக்காமல் இப்படியொரு நியமனமா..? துரைமுருகன் வேதனை..!

By Thiraviaraj RMFirst Published May 12, 2021, 11:12 AM IST
Highlights

புதுச்சேரி தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பதற்கு முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பதற்கு முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ’’புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.

சட்டமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். “30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டமன்றம்” எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் 33-ஆக உயர்த்தி, மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.

புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டமன்றத்திற்கு இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதலமைச்சரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை ஒன்றிய அரசு செய்து பா.ஜ.க.வின் எண்ணிக்கையை 9-ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது.

 

புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து – கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு, புதுச்சேரி மக்களின் நலனிலும், மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

click me!