ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனாவால் உயிரிழப்பு.

By Ezhilarasan BabuFirst Published May 12, 2021, 11:01 AM IST
Highlights

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது-72, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு  ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். அது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய நிலையில், அது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இன்னும் பதில் இன்றி மர்மமாகவே உள்ளது. இந்த கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு உதவியதாக  கூறி தமிழகத்தைச் சேர்ந்த சாந்தன் முருகன், பேரறிவாளன், நளினி, உள்ளிட்ட 7 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். 

இந்த கொலை வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரியான ரகோத்தமன் தலைமையிலேயே நடைபெற்றது. ரகோத்தமன் உளுந்தூர்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தில் பிறந்தவர் ஆவார். தற்போது அவர் கள்ளக்குறிச்சியில் வசித்து வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், சிபிஐயில் சாதாரண சப்-இன்ஸ்பெக்டராக பணியை தொடங்கினார். தேசிய போலீஸ் அகாடமியில் ஒரு வருடம் பயிற்சி பெற்ற அவர், இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணியாற்றி சிபிஐ தலைமை புலனாய்வு அதிகாரி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து சர்வதேச அளவில் பிரபலமடைந்தார்.

ஓய்வு பெற்ற பின்னரும் பல்வேறு ஊடகங்களில் தனது கருத்துக்களை எடுத்து வைத்து வந்தார். குறிப்பாக பேரறிவாளனிடம் வாக்குமூலங்கள் மிரட்டியே வாங்கப்பட்டது என அவர் கூறியிருந்தார். அதை வைத்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை உச்சம் அடைந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை முகப்பேரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரகோத்தமன் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான பாண்டூரில் அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!