MK Stalin : மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. ஸ்டாலின் சொன்ன “சீக்ரெட்” சூடு பறக்கும் தேர்தல் களம் !

By Raghupati RFirst Published Dec 19, 2021, 12:49 PM IST
Highlights


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சூசகமாக கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சியினருக்கு பங்கீடு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ஆட்சிக்கு நல்ல பெயர் இருக்கிறது. மக்கள் நன்றாக பேசுகிறார்கள் என்று கருதி நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. மாநிலம் முழுதும் திமுகவின் உறுப்பினர் சேர்க்கையை நாம் தீவிரப்படுத்த வேண்டும். மார்ச் 1 ஆம் தேதிக்குள் திமுகவின் ஒவ்வொரு நிர்வாகியும் தனக்கு உட்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 30% பேரை திமுகவில் உறுப்பினர் ஆக்குவதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். 

பெண்கள், இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு திமுக உறுப்பினர்களாக இருக்கவேண்டும். ஆளுங்கட்சி என்பதால் அனைவரும் ஆர்வமாகக் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். அதனால் ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் ஆயிரம் உறுப்பினர் படிவம் வழங்குகிறேன், ஒரு படிவத்தில் 25 பேர் சேர்க்கலாம், ஆயிரம் படிவங்களில் உறுப்பினர்களைச் சேர்த்து அந்த படிவங்களைத் தலைமைக்கு ஒப்படையுங்கள். 

அதாவது தொகுதிக்கு 25ஆயிரம் பேர் சேர்க்கவேண்டும், 234 தொகுதிக்கும் 58 லட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வரக்கூடிய உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில் 100% சதவீதம் வெற்றிபெற்றாக வேண்டும் அதற்காக நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.  ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போலவே கூட்டணிக் கட்சியினருக்கு உரிய இடங்களை மாவட்ட அளவில் மாவட்டச் செயலாளர்களான நீங்களே பேசி முடித்துக் கொள்ள வேண்டும். கவுன்சிலர்கள் வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு வார்டிலும் இருவர் அடங்கிய பட்டியலையும், சேர்மன்  தேர்தலுக்கு மூவர் அடங்கிய பட்டியலையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள், தவறுகள் இருந்தால், குறைகள், குற்றங்கள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன். யாராவது கருத்துச் சொல்ல விரும்பினால் சொல்லுங்கள். ஆட்சி நன்றாக இருக்கிறதே என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. பூத் கமிட்டி போட வேண்டும், ஒவ்வொரு பகுதியிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்’ என்று பேசினார்.

இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தோம். ‘நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுமார் 90 சதவீத இடங்களை வென்றது. இந்த வெற்றி திமுகவின் செயல்பாட்டிற்கு மக்கள் அளித்த பாராட்டுப் பத்திரம் என்று திமுக தலைமைத் தெரிவித்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றுவதில் திமுக கவனம் செலுத்தி வருகிறது. திமுக ஆட்சி பற்றி மக்கள் மத்தியில் நல்ல பேச்சு இருப்பதால் முதல்வர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இந்த நிலையே வரப்போகும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம் கூட. குறிப்பாக ஆட்சிக்கு எதிராக எந்தவித கேட்ட பெயரும் இல்லாததால், மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை முழுமையாக கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலினும், திமுக தலைமையும் இருக்கிறது. காரணம் என்னவென்றால், நேரடி தேர்தல் நடந்து, அதில் கட்சியில் உள்ள கோஷ்டிப்பூசல் மற்றும் உட்கட்சி உள்ளடி போன்றவை காரணமாக தோல்வி ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் அது எதிர்கட்சிகளான அதிமுக,பாஜக ஆகியவற்றுக்கு மைலேஜாக அமைந்துவிடும்.

எனவே அந்த நிலை, இனி எப்போதும் ஏற்படக் கூடாது என்று நினைத்து தான், முதல்வர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சூசகமாக சொல்லியிருக்கிறார். இதில் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு ஆளும் திமுக மறைமுகத் தேர்தலை விரும்புகிறது என்றும், அதனை மாவட்ட செயலாளர்கள் அதற்கு தயராக இருக்க வேண்டும் என்றும் தெளிவாக தெரிகிறது.இந்த செய்தி தற்போது அரசியல் வட்டாரங்களில் ‘தேர்தல்’ சூட்டினை கிளப்பியிருக்கிறது.

click me!