
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நிதிநிலை அறிக்கை படிக்க மேசையில் கணினி வசதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இது ஒரு முன்னோடி முயற்சியாகக் கருதப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அரசு பல்வேறு சவால்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு திமுக உள்ளது. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்துள்ள நிலையில் அதை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த பட்ஜெட் மீதான பொது மக்கள் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும்கூட மக்கள் கொடுத்த வாக்குறுதி கட்டாயம் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசியல் 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. அப்போதைய தமிழக அரசு 2001-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் இது என்பதால், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேடையிலும் கம்ப்யூட்டர் திரை பொருத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்கும்போது அவர்கள் கம்ப்யூட்டர் திரையில் பட்ஜெட் அறிக்கையை பார்க்க முடியும், அதே போல் அவர்கள் ஒவ்வொருவருக்கும் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல அவர்கள் பட்ஜெட் பக்கங்களை கீழும் மேலும் தள்ளி பார்க்கவும், பக்கங்களை புரட்டி பார்க்கும் வகையில் டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய கனினி திரை வழங்கப்பட்டுள்ளது. காகிதம் விரையமின்றி தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால், இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.