தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பட்ஜெட் . வாசிக்க தயாரானார் பிடிஆர். வாக்குறுதியை காப்பாற்றுவாரா ஸ்டாலின்

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 8:07 AM IST
Highlights

பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் பட்ஜெட்டை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

பத்து ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக அரசு இன்று தாக்கல் செய்கிறது. நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று காகிதம் இல்லாத பட்ஜெட்டாக அதை தாக்கல் செய்கிறார்.திமுக தனது தேர்தல் அறிக்கையில்  ஏராளமான மக்கள் நல வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், இந்த பட்ஜெட்  பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தின்போது ஏராளமான வாக்குறுதிகளை அளித்ததும் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதாவது, பெட்ரோல் டீசல்  விலை குறைக்கப்படும், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டும் வரும்வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது, இந்து ஆலயங்கள் சீரமைக்க 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும், தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும், பத்திரிக்கையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும், மகளிர் திருமண உதவித் தொகை ரூபாய் 24 ஆயிரமாக உயர்த்தப்படும் என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதேபோல் கூட்டுறவு நகை கடன் 5 பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி போன்றவையும் அதில் இடம் பெற்றுள்ளன. 

இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்1000 ரூபாய் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியும் ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவை கேள்வி மேல் கேள்வி கேட்டு நெருக்கி வருகின்றன. அதேநேரத்தில் தமிழகத்தில்   கஜானாவை அதிமுக காலி செய்து விட்டது எனவும், இதனால் மிக கடுமையான நிதி நெருக்கடியில் அரசு சிக்கி தவிப்பதாகவும் தெரிவித்த நிதியமைச்சர் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் மூலம் பகிரங்கபடுத்தினார். கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும்கூட தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். எனவே இந்நிலையில்  பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 

எனவே இந்த பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முதல் முறையாக தாக்கல் செய்கிறார், ஒரு முழு வடிவிலான இ-பட்ஜெட் முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று தொடங்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 23ஆம் தேதி நிறைவடைகிறது, அதேபோல் பட்ஜெட் மீதான விவாதங்கள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது மாடியில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த பட்ஜெட்டிலும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் பட்ஜெட்டை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அவர் வாசிக்கும் பட்ஜெட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் இருக்கையிலிருந்து, அமர்ந்தபடியே அவர்களின் மேசையில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களுக்கு டேப்லெட் என்ற கருவியும் வழங்கப்பட்டுள்ளது,

முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு, நிறுவனங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவர் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கிடையில் சட்டமன்றம் கூட உள்ளதால், இந்த கூட்டத்தொடரில் அனல் தெறிக்கும் விவாதங்கள், கருத்து மோதல்கள், வெளிநடப்பு போன்றவைகள் அதிகம் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த சட்டமன்ற கூட்டத்தொடர், சூடாகவும், அனல் கிளப்பும் தொடராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!