
மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என தமிழக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், ‘’மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்பு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும். பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.
திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ₹1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 திருக்கோவில்களில் 100 கோடி ரூபாய் செலவில் குளங்கள், தேர்கள் புதுப்பிக்கப்படும். எம்.ஜி.ஆர் மதிய உணவு திட்டத்திற்கு ₹1,725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதிய வருவாய் இல்லாத 12,059 கோவில்களில் ஒரு கால பூஜையை நடத்த 130 கோடி ரூபாய் நிலை நிதி ஏற்படுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் பூஜைகள் நடத்தப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.