போக்குவரத்து துறைக்கு புதிதாக 1000 பேருந்துகள் வாங்க நிதி.. ரூ. 623.59 கோடி ஒதுக்கி பிடிஆர் அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2021, 12:20 PM IST
Highlights

தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்த அவர் கூறியதாவது: அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க சுமார் 2,200 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்படும் எனறார். 

தமிழகத்தில் போக்குவரத்து துறையை மேம்படுத்தவும், கூடுதலாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ரூபாய் 623.59  கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மிகுந்த நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கி தவித்து வரும் நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

குறிப்பாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு மத்தியில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சரியாக காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கிய நிதி அமைச்சர், பட்ஜெட் உரையின் துவக்கத்தில் பெரியார், அண்ணா, கலைஞருக்கு நிதியமைச்சர் புகழாரம் சூட்டி உரையை துவங்கினார். அரசின் நிதிநிலை மோசமானநிலையில் உள்ள நிலையில் அது நிச்சயம் சீர்படுத்தப்படும் என மக்களுக்கு தாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம் என்றார், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அது படிப்படியாக  நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். 

தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்த அவர் கூறியதாவது: அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க சுமார் 2,200 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்படும் எனறார். தமிழக அரசின் பட்ஜெட்டில் நெடுஞ்சாலை துறைக்கு ரூபாய் 17,899.17  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவதாக கூறினார்.

ஊரக புத்தாக்க திட்டம் சீரமைக்கப்பட்டு ரூபாய் 212.69  கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். மேலும் வீட்டுவசதித் துறையில் உலக வங்கி திட்டங்களுக்கு ரூபாய் 320.40 கோடியும், ஆசிய வங்கி திட்டங்களுக்கு ரூபாய் 171 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.  தமிழகத்தில் தற்போதுள்ள போக்குவரத்துத் துறையை மேம்படுத்தவும் கூடுதலாக 1000 புதிய பேருந்துகள் வாங்கவும் ரூபாய் 623.59 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார். 

அதில் மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக 703  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறினார். அதேபோல போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியமாக 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட போது, போக்குவரத்து துறையின் மீது அதிக அளவில் கடன் வாங்கப்பட்டுள்ளது, எனவே போக்குவரத்து துறையை சீர்படுத்தி ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அத்துறைக்கு புதிதாக 1000 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

click me!