தமிழ்நாட்டில் பா.ஜ.க. பருப்பு வேகாது! தாமதமாக புரிந்து கொண்ட அமித்ஷா!

First Published Jul 11, 2018, 10:24 AM IST
Highlights
Tamil Nadu BJP Lentils Amit Shah understood late


தமிழகத்தில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பா.ஜ.க.வால் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பதை அமித் ஷா தாமதமாக புரிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை அமித் ஷா வகுத்து வருகிறார். கேரளா, மேற்கு வங்கத்தில் கூட நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெல்ல முடியும் என்று அமித் ஷா நம்புகிறார். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறுவது கூட சிரமம் என்கிற முடிவுக்கு அமித் ஷா வந்துவிட்டதாக கூறுகிறார்கள். பா.ஜ.க. என்றாலே தீண்டத்தகாத கட்சி என்பது போல் மக்கள் அல்ல சக அரசியல் கட்சிகளே நினைத்து வருவது சென்னை வந்த பிறகு தான் அமித் ஷாவுக்கு புரிந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியது முதலே அமித் ஷா, இரண்டு மூன்று பேரிடம் இருந்து செல்போனிலாவது அழைப்பு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அமித் ஷா விமானத்தில் ஏறி டெல்லி புறப்படும் வரை அந்த இரண்டு மூன்று பேரில் ஒருவர் கூட அமித் ஷாவை தொடர்பு கொள்ளவில்லை.  தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க அல்லது அ.தி.மு.க.விடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது தான் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் நிலை. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்கிற கதவை கடந்த ஆண்டே தி.மு.க மூடிவிட்டது. அ.தி.மு.கவுடன் தற்போதைய சூழலில் பா.ஜ.க.வுடன் இணைந்த போட்டியிட்டால் கூட வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே. இருந்தாலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் கவுரவமான வாக்குகளையாவது பெறலாம் என்பது தான் அமித் ஷாவின் கணக்கு.  ஆனால் கூட்டணி என்கிற பா.ஜ.க.வின் தூண்டிலில் தற்போது வரை அ.தி.மு.க. சிக்கவில்லை. சரி பெரிய கட்சிகளை விட்டுவிடுங்கள் சின்னச்சின்ன கட்சிகள் கூட அமித் ஷாவை கண்டுகொள்ளவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் சென்னை வந்த போது தி.மு.க – அ.தி.மு.க தவிர்த்து மற்ற கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளின் நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்து வந்தனர். பிரச்சாரத்திற்காக சென்னை வந்த போது ரஜினியை மோடி சந்தித்தார். கோவையில் தங்கியிருந்த போது மோடியை நேரில் சென்று நடிகர் விஜய் சந்தித்தார். அந்த அளவிற்கு அப்போது பா.ஜ.க.வின் செல்வாக்கு இருந்தது. தற்போதைய சூழலி சின்னச் சின்ன கட்சிகள் கூட கண்டுகொள்ளாத நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழக வியூகத்தை இறுதி செய்ய முடியாமல் அமித் ஷா டெல்லி திரும்பிவிட்டார்.  மேலும் என்னதான் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் பா.ஜ.க.வால் தமிழகத்தில் தற்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டே இங்கிருந்த சென்றுள்ளார் அமித் ஷா.

click me!