பிரதமரிடம் பேசி பணத்தை வாங்கி பொங்கலுக்கு ரூ.5000 கொடுங்க.. ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சியின் அசால்ட் ஐடியா.!

By Asianet TamilFirst Published Jan 8, 2022, 10:39 PM IST
Highlights

 மழை, வெள்ளம் வந்திருக்கிற சூழ்நிலையில்  நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது என்பதும் உண்மைதான். முந்தைய அதிமுக அரசு, கஜானாவை காலி செய்து போயுள்ளது.

மத்திய அரசிடம் பேசி வெள்ள நிவாரணத்தை பெற்று, பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடு முழுவதும் சிறுபான்மையின மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்தில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சர்ச்சுகளை இடித்துத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தைக்கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. ஹரித்துவாரில் பேசப்பட்ட வெறுப்பு பேச்சு குறித்து காவல் துறையினர் சாதாரணமாக ஜாமீனில் வெளி வரக்கூடிய வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கொலைவெறி சம்பவங்களுக்கு பின்னால் மத்திய பாஜக அரசே உள்ளது. இதுதான் எங்களுடைய பகிரங்கமான குற்றச்சாட்டு ஆகும். எனவே நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றாக சேர வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மை என்று மக்களை பாகுபடுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தி வருவதை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் திமுக தலைமையில் எல்லா மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். அதே போல இந்தியாவில் இருக்கிற காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எல்லா மதசார்ப்பற்ற கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிற பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.  

எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கவே பாஜக பலரையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. அதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் துணை போவது போல்தான் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது. தமிழக முதல்வர் பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த ஆண்டு மழை, வெள்ளம் வந்திருக்கிற சூழ்நிலையில்  நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது என்பதும் உண்மைதான். முந்தைய அதிமுக அரசு, கஜானாவை காலி செய்து போயுள்ளது. பிரதமர் மோடி வருகிற 12-ஆம் தேதி தமிழகம வருவதாக அறிவித்துள்ளார். எனவே பிரதமரிடம் பேசி மழை, வெள்ள நிவாரணத்தை பெற்று, இந்தப் பொங்கல் விழாவையொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

click me!