பாஜகவை தோற்கடிச்சே ஆகணும்.. எந்தக் கட்சி ஆதரவையும் ஏற்போம்.. காங்கிரஸை கரை சேர்க்க ப.சி.யின் புது ரூட்டு.!

By Asianet TamilFirst Published Jan 8, 2022, 8:19 PM IST
Highlights

திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் (எம்ஜிபி) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 

பாஜகவைத் தோற்கடிக்க விரும்பும் எந்தக் கட்சியின் ஆதரவையும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 40 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளைத் தாண்டு மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இந்த முறை கோவா தேர்தலில் குதிக்கிறது. இதற்காக அக்கட்சி தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இத்தேர்தலுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ராவை மம்தா பானர்ஜி இறக்கிவிட்டுள்ளார். “கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம்" என்றும் மஹுவா மொய்த்ரா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் தீவிரத்தில் உள்ளது. கோவாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்கவில்லை. 2017-ல் அதிகபட்சமாக 17 இடங்களை காங்கிரஸ் வென்றபோதும், பாஜக திரும்பவும் ஆட்சியை அமைத்தது. கடந்த 5 ஆண்டுகளில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் கட்சி தாவியதால் காங்கிரஸ் கட்சியும் பலத்தை இழந்துள்ளது. எனினும் ஆட்சியைக் கைப்பற்றும் நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சி களமிறக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவாவின் பதிலை வரவேற்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். “'கூட்டணி குறித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை செய்தித்தாள்களில் படித்தேன். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை நாங்கள் காத்திருப்போம். காங்கிரஸ் கட்சியிடம் பாஜகவைத் தோற்கடிக்கும் சக்தி உள்ளது. என்றாலும் எங்களைப்  போலவே பாஜகவைத் தோற்கடிக்க விரும்பும் எந்தக் கட்சியும் காங்கிரஸை ஆதரிக்க முன்வந்தால், நாங்கள் அந்த ஆதரவை வேண்டாம் என்று சொல்ல மாட்டோம்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கோவாவுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நீலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் (எம்ஜிபி) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 

click me!