
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்க வேண்டும், முக கவசம் அணியாத பயணிகளிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே சென்னை மண்டல கோட்ட நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே ரயிலில் பயணிகள் பின்பற்ற வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பாக புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறையில் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 6 ஆம் தேதியிலிருந்து பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திள்ளது. அதன்படி ரயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் வரும் திங்கட்கிழமை இந்த மாதம் முதல் 31 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதில் 2 டேஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்க வேண்டும், டிக்கெட் கவுண்டரில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
சீசன் டிக்கெட் ஏற்கனவே வைத்து இருக்கும் பயணிகள் டிக்கெட் பரிசோதனை செய்யும்போது இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கேட்கும்போது காண்பிக்க வேண்டும். UTS app இணையதள முன்பதிவு மேற்குறிப்பிட்ட நாட்களில் செயல்படாது. மேலும் தமிழக அரசு, குடும்பநல அமைச்சகத்தின் வழிக்காட்டு நெறிமுறைகளை புறநகர் இரயில் பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும், முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் பயணம் செய்வது கண்டறியப்பட்டால் 500 ரூபாய் அபராதம் வசீலிக்கப்படும் என தெற்கு இரயில்வே சென்னை மண்டல கோட்டம் தெரிவித்து உள்ளது.