#Breaking : 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரைவத் தேர்தல் எப்போது? தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!!

By Narendran SFirst Published Jan 8, 2022, 4:35 PM IST
Highlights

பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர்,உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரைவத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர்,உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரைவத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா 3வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரைவத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும் , பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கும் , மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும் , கோவாவில் 40 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 5 மாநில தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் டிசம்பர் இறுதியில் இருந்து தேர்தல் ஆணையக் குழு ஆய்வு செய்தது. மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை கேட்டு கள ஆய்வு அடிப்படையில் தேர்தலை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 18.34 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். ஒரு வாக்குச்சாவடியில் 1,250 முதல் 1,500 பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2. 16 லட்சமாக அதிகரித்துள்ளது. 5 மாநிலங்களில் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 24.9 லட்சமாக உள்ளது. முறை வாக்களிக்கும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 11.4 லட்சம். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், 80 வயது முதியோர் ஆகியோர் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்களிக்கலாம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முன்வர வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும். பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட எதன் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை விளக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இ - விஜில் என்ற செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக புகார்களை அளிக்கலாம். உத்தரப்பிரதேசத்தில் 90 % பேருக்கு முதல் தவணை, 52 % பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 82 % பேருக்கு முதல் தவணை , 56 % பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாக கருத்தில் கொள்ளப்பட்டு கூடுதல் தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

5 மாநில தேர்தலில் வாக்களிக்கும் நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் இயன்ற வரை டிஜிட்டல் முறையில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். நடைப்பயணம் , சைக்கிள் பேரணி ஆகியவற்றுக்கு ஜனவரி 15 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 ஆம் தேதி வரை அரசியல் கட்சியினர் நேரடிப் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடு , வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்கள் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 14 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 20 ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 23 ஆம் தேதி 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 27 ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 7 ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளுக்கும் பிப்.14 ல் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். பஞ்சாப்பில் 117 , கோவாவில் 40 , உத்தராகண்ட்டில் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும். பிப்.14 ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும். மணிப்பூரில் பிப் .27 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு, மார்ச் 3 ஆம் தேதி இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

click me!