ஆளுநர் மாளிகையை உடனே கையகப்படுத்துங்க.. துணைவேந்தர் நியமன முறைகேடுகளை விசாரிங்க.. சீறும் திருமாவளவன்.

Published : Apr 25, 2022, 06:54 PM IST
ஆளுநர் மாளிகையை உடனே கையகப்படுத்துங்க.. துணைவேந்தர் நியமன முறைகேடுகளை விசாரிங்க.. சீறும் திருமாவளவன்.

சுருக்கம்

தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் என்றும் சட்டப் பேரவையில் இன்று மசோதா நிறைவேறி புதிய வரலாறு படைத்த முதல்வருக்கு எமது பாராட்டுகள் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் என்றும் சட்டப் பேரவையில் இன்று மசோதா நிறைவேறி புதிய வரலாறு படைத்த முதல்வருக்கு எமது பாராட்டுகள் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருப்பது போல் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கே வழங்கக்கூடிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மசோதாவைத்  தமிழ்நாடு சட்டப் பேரவையில்இன்று (ஏப்ரல் 25) நிறைவேற்றி இருக்கும் தமிழக அரசுக்கும் குறிப்பாக, மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல்கலைக் கழகங்களை நிர்வகிக்கும் துணைவேந்தர்களை ஆளுநர்கள் தேர்வு செய்வதென்பது இதுவரை ஒரு சடங்காகவே இருந்து வருகிறது. துணைவேந்தரைத் தேர்வு செய்யும் வல்லுநர் குழு தகுதி வாய்ந்த மூன்று பெயர்களை வரிசைப்படுத்தி அவர்களுக்கான தகுதி மதிப்பெண்களோடு ஆளுநரிடம் வழங்கும். அவர் அதிக தகுதி மதிப்பெண் பெற்று பட்டியலில் முதல் பெயராக குறிப்பிடப்பட்டிருப்பவரை துணைவேந்தராக அறிவிப்பார். 

இது வழக்கமான நடைமுறை. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் ஆளுநர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலும் தகுதியைப் புறந்தள்ளிவிட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றியிருப்பது போற்றுதலுக்குரிய புதிய வரலாறாகும். இது தமிழ்நாட்டின் உயர் கல்வியைப் பாதுகாக்கக் கூடிய துணிச்சல் மிகுந்த நிலைப்பாடாகும். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகளைக் கண்டறிய தமிழ்நாடு அரசு  நீதி விசாரணை நடத்திட ஆணையிட வேண்டும். மேதகு ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் செய்திருக்கும் நியமனங்களில் தேர்வுக் குழு தேர்ந்தெடுத்து அளித்த மூன்று பேருக்கு அளிக்கப்பட்ட தகுதி மதிப்பெண் விவரங்களை ஆளுநர் அலுவலகம் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

உயர்கல்வி பயில்வோர் விகிதம் இந்திய சராசரியை விட தமிழ்நாட்டில் சுமார் இரு மடங்கு உள்ளது. இந்திய சராசரி 27.1% ஆனால் தமிழ்நாட்டிலோ அது 51.4% .தமிழ்நாட்டினுடைய உயர்கல்வி வளர்ச்சியைப் பார்த்து பொறாமை கொண்ட சனாதன சக்திகள் தமிழ்நாட்டின் உயர்கல்வியை சீர்குலைப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு ஆளுநரைப் பயன்படுத்துகிறார்கள். ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதல்ல பிரச்சனை;  மாறாக, தமிழ்நாட்டினுடைய கல்வி வளர்ச்சியை, பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்கப் போகிறோமா அல்லது அதை சீர்குலைக்க நினைக்கும் சனாதன சக்திதிகளுக்கு நாம் பலியாகப் போகிறோமா என்பது தான் பிரச்சனை. ஆளுநர் பதவியே மாநிலங்களுக்குத் தேவையில்லை என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு! 
எனினும் ஆளுநர் பதவி நீடிக்கும் வரையில் ஆளுநருக்கு தங்குமிடம் மற்றும் செயலகம் தேவையே ஆகும். 

ஆனால், பலநூறு ஏக்கர் பரப்பளவு இடமும் நூற்றுக்கணக்கானோர் தங்குமளவுக்கு மாபெரும் மாளிகையும் தேவையா என்னும் கேள்வி எழுகிறது. அத்துடன்,  ஆளுநருக்கு நீலமலை உதகையிலும் கூடுதலாக ஒரு மாளிகை இருப்பது தேவையா? இது மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்வதாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து இந்த ஆதிக்கமுறை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும். ஊட்டியிலிருக்கும் ஆளுநர் மாளிகையை அரசு கையகப்படுத்தி அதை வேறு பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..
ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்