நோய் தொற்று விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க விரைந்து செயல்படுங்கள்.. 8 மாநில முதல்வர்களிடம் மோடி கண்டிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Nov 24, 2020, 4:51 PM IST
Highlights

வைரஸ் பரவலை 5 சதவீதத்திற்கு கீழ் இருக்கும்படி கட்டுப்படுத்தவேண்டும். நாடு ஒரு ஆழ் கடலிலிருந்து நீந்தி கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே நோய் பரவலை குறைப்பதற்கான தீவிர முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்.

நாட்டு மக்களுக்கு எப்போது தடுப்புசி கிடைக்கும் என்பதை தங்களால் தீர்மானிக்க முடியாது என்றும், அது விஞ்ஞானிகளின் கைகளில்தான் உள்ளது என்றும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்கள் தொற்று விகிதத்தை 5 சதவீதத்திற்கு கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் உள்ள 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், அரியானா, சதீஷ்கர், கேரளா  ஆகிய 8 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றார். அதில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல், தடுப்பூசி வினியோகம் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  நாட்டில் ஒரளவுக்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக வடஇந்திய மாநிலங்களில் வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இது நாட்டில் வைரசின் இரண்டாவது  அலையாக இருக்கக் கூடுமென சந்தேகிக்கப்படுகிறது. 

வரும் டிசம்பர் மாதத்தில் வைரஸ் தொற்று தாக்கம் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் 8 மாநில முதலமைச்சர்கள் மத்தியில் மோடி உரையாற்றியதாவது: இந்த 8 மாநிலங்கள் கொரோனா வைரஸ் பரவலை 5  சதவீதத்திற்கும் குறைவாக கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்கள் ஆன்டிஜென் சோதனைகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை அதிகரிக்கவேண்டும். கடந்த சில மாதங்களாக கண்ணுக்குத் தெரியாத  மிகப்பெரிய எதிரியை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம். நம் அனைவரின் ஒருங்கிணைந்து முயற்சியால் குறைந்தபட்ச இழப்புகளுடன், நாடு நிலையான நிலையில் உள்ளது. மக்கள் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு விதமாக நடந்து கொண்டனர். முதற்கட்டத்தில் அவர்கள் மத்தியில் நோய் குறித்து பயம் இருந்தது. 

இரண்டாவது கட்டத்தில் அது குறித்து பயம்கலந்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. மூன்றாவது படத்தில் சமூகமே ஒன்றோடு ஒன்று தொடர்பு அற்று துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் போராடி அதிலிருந்து நாம் மீண்டு வந்துள்ளோம்.  நான்காவது கட்டத்தில் கொரோனா வைரஸிலிருந்து அதிக மக்கள் மீண்டுவர தொடங்கிய நிலையில் வைரஸ் பலவீனமாகிவிட்டதாக மக்கள் உணர்ந்தனர்.  ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அதிலிருந்து குணமடைந்து வரமுடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது, அதனால் மக்கள் மத்தியில் அலட்சியம் அதிகரித்துள்ளது. பண்டிகைகளுக்கு முன்புகூட நாட்டு மக்கள் பண்டிகை காலங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என கையெடுத்து கும்பிட்டி வேண்டினேன், மொத்தத்தில் நான்காவது கட்டத்தில் நாம் செய்த தவறுகளை நாம் சரி செய்ய வேண்டும். குறிப்பாக இம்மாநிலங்கள் கொரோனா வைரஸை தடுப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். வைரஸ் பரவலை 5 சதவீதத்திற்கு கீழ் இருக்கும்படி கட்டுப்படுத்தவேண்டும். நாடு ஒரு ஆழ் கடலிலிருந்து நீந்தி கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே நோய் பரவலை குறைப்பதற்கான தீவிர முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். 

இறப்பு வீகிதத்தை 1 சதவீதமாக குறைக்க வேண்டும், தற்போதைக்கு தடுப்பூசி ஆராய்ச்சி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது, அதன் ஒவ்வொரு வளர்ச்சி நிலையையும் இந்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஆனால் தடுப்பூசி என்பது ஒரு டோஸா அல்லது இரண்டு டோஸா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதன் விலையும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில் எங்களிடத்தில் இல்லை, நாங்கள் இதுகுறித்து  இந்திய டெவலப்பர்கள் மற்றும் பிற உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு அது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே நம் குறிக்கோள். நாம் அனைவரும் ஒரு அணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், தடுப்பூசியால் இந்தியாவுக்கு கிடைத்த அனுபவம் மிகப் பெரியது, அது பெரிய நாடுகளுக்கு கூட கிட்டவில்லை. இந்தியா எந்த தடுப்பூசி அளித்தாலும் அது அறிவியல் பூர்வமாக இருக்கும், தடுப்பூசியை நிர்வகிப்பதில் மாநிலங்கள் முன்வந்து செயலாற்ற வேண்டும் இவ்வாறு மோடி கூறினார். 

மேலும் கூட்டத்தில் முதலமைச்சர்களிடம் மோடி கூறுகையில், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு போதுமான ஆக்சிஜன் வழங்க முயற்சிக்கப்படுவதாகவும், வென்டிலேட்டர்களை வழங்க PM கேர்ஸ் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

click me!