கொரோனாவால் உயிரிழந்து நிற்கும் உறவுகளின் துயரத்தை போக்குங்க.. எடப்பாடிக்கு முக்கிய கோரிக்கை வைத்த அன்சாரி..!

By vinoth kumarFirst Published Jul 29, 2020, 4:12 PM IST
Highlights

கொரோனாவால் உயிரிழந்த இறந்தவர்களின் முகத்தை இறுதியாக பார்க்க சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த இறந்தவர்களின் முகத்தை இறுதியாக பார்க்க சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ;- கொரோனா தொற்று காரணமாக உயிர் இழப்பவர்களின் இறுதி சடங்குகள் அவரவர் மத வழக்கங்களின்படி உரிய மரியாதையுடன் நடைபெற அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டல்கள் உள்ளது. இது மதிக்கப்படும் அதே வேளையில், அக்குடும்பத்தினரின் நியாயமான சில எதிர்பார்ப்புகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

முக்கியமாக, இறந்தவர்களின் முகத்தை இறுதியாக பார்க்க சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது நியாயமான விருப்பமாகும். தங்கள் பாசத்திற்குரியவர்களின் உயிர்களை இழந்து நிற்கும் உறவுகளின் துயரத்தை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, இறந்தவர்களின் முகத்தை பார்க்க,  குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சம் 10 பேர் வரை அனுமதிக்கப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.பொது நலன் கருதி, அவர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் வர நிபந்தனை விதிக்கலாம். இது குறித்து தமிழக அரசு மனிதாபிமானத்தோடு நல்ல முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். 

click me!