இன்னும் அடியாளாகவே வைத்திருக்காமல் அறிவாளியாக மாற பாடம் எடுங்கள்... ராமதாஸுக்கு மனம் திறந்த மடல்..!

By Thiraviaraj RMFirst Published Nov 29, 2021, 6:00 PM IST
Highlights

​இன்னும் எங்களை அடியாட்களாகவே வைத்துக் கொள்ள நீங்கள் பயன்படுத்தும் சத்திரியன் ஆண்ட பரம்பரை என்ற அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை எங்கள் மீது திணிக்க வேண்டாம்

​இன்னும் எங்களை அடியாட்களாகவே வைத்துக் கொள்ள நீங்கள் பயன்படுத்தும் சத்திரியன் ஆண்ட பரம்பரை என்ற அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என பாமக ராமதாஸுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது அன்புமணியை முதல்வராக்கியே தீர வேண்டும் என ராமதாஸ் திட்டமிட்டு அதற்கு தகுந்த அளவில் தனது சமூகத்தினரிடையே உந்துதலை ஏற்படுத்தி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை கையெலெடுத்து அதிக வெற்றி வாய்ப்பை பெற நினைக்கிறது பாமக. 

அதற்காக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகிறது. ’’தனியாக நிற்க வேண்டாம். நம்மிடம் சக்தி இல்லை. சக்தியை இழந்து கிடக்கிறோம். ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்கள் வற்புறுத்தினீர்கள். 

இதனால் மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்எல்ஏக்கள், 25 எம்எல்ஏக்கள், 18 எம்எல்ஏக்கள், 6 எம்பிக்கள், 10 ஆண்டுகாலம் 2 மத்திய அமைச்சர்கள் என பாமகவின் செல்வாக்கு உயர்ந்தது. அப்போது தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என நீங்கள் சொன்னீர்கள். தற்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளோம்.

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் உள்ளூர் புரிதலுக்கு விட்டுக் கொடுப்பது என திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பாமகவுக்கு குழி பறித்தனர். இதனால் 2 தொகுதிகளை இழந்தோம். அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். அந்த வியாதி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. இது தொடராமல் தடுப்பதற்கு ஒரே வழி திண்ணை பிரச்சாரம். சமூக வலைதளம் ஆகியவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வதுதான். திண்ணை பிரச்சாரம் வரும் சட்டசபை தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது, திறமையானவர். அவரது தலைமையில் பாமகவின் ஆட்சி அமைய வேண்டும். ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.'' எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ராமதாஸ் பேசிய புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ‘’சத்ரியன் எப்படி இருக்க வேண்டும்?  சத்ரியனோட இலக்கணமே என்ன? புஜத்தை தூக்கி, தட்டிக்கொண்டு...  உயர்த்திக் கொண்டு... ம்ம்ம்.... ம்ம்ம்... ம்ம்ம்... வீராப்பு காட்ட வேண்டும். அவன் தான் சத்ரியன்’’ எனத் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தனது முகநூல் பதிவில், ‘’ உங்களை நம்பி வந்த தொண்டனை பார்த்து ஒரு சத்ரியன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தை எடுப்பதை தவிர்த்து விட்டு, ஒரு அறிவார்ந்த கொள்கை பேசும் தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் எடுங்கள். உங்கள் பிள்ளை அன்புமணியை போல ஒரு டாக்டர் ஆகவும், பேர பிள்ளைகளை போல நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பிள்ளைகளாக மாற பாடம் எடுங்கள். 

இயற்கை பேரிடர் வந்தால் தம்மை போல இரண்டு வருடம் வெளியில் வராமல் சாப்பிடும் அளவுக்கு எப்படி சொத்து சேர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். அதை விட்டுவிட்டு இன்னும் எங்களை அடியாட்களாகவே வைத்துக் கொள்ள நீங்கள் பயன்படுத்தும் சத்திரியன் ஆண்ட பரம்பரை என்ற அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை எங்கள் மீது திணிக்க வேண்டாம்.’’ எனத் தெரிவித்துள்ளார்.  

click me!