உயிரையே பணயம் வைத்து வேலை செய்தவர்களை வீட்டுக்கு அனுப்பாதீங்க... வேல்முருகன் வேண்டுகோள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 29, 2021, 5:13 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் உறவினர்களே செல்லத் தயங்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் தாயுள்ளதோடு செயலாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே.
 

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதைக் கைவிட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கொரோனாவின் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிக அளவில் இருந்தபோது, தற்காலிகமாக மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதார ஆய்வாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறந்த முறையில் சேவையாற்றினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் உறவினர்களே செல்லத் தயங்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் தாயுள்ளதோடு செயலாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே.

மேலும், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், டெங்கு போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளனர். அவர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத இச்சூழலில், இம்மாத இறுதியுடன் பணியில் இருந்து நின்றுவிடுமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக, எழுத்துபூர்வமாகவும், வாய்மொழியாகவும் அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இத்தகைய நடவடிக்கை பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கையை நிபுணர்கள் விடுத்த நிலையில், ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதைக் கைவிட வேண்டும். பல மாதங்களாக நிலுவையில் உள்ள அவர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களை மருத்துவப் பணியாளர் நியமன வாரியம் மூலம் நிரந்தர அடிப்படையில் தமிழக அரசு நியமிக்க வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!