உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுமை நடக்கிறது... கொந்தளித்த டி.ஆர். பாலு..!

By Asianet TamilFirst Published Nov 22, 2020, 10:05 PM IST
Highlights

பாஜகவுக்கு ஒரு நியதி, திமுகவுக்கு ஒரு நியதியா என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை நேற்று முன்தினம் திருக்குவளையில் தொடங்கினார். ஆனால், பிரசாரத்திக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்பட்டுவருகிறார். இந்நிலையில் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்காமல் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் காவல்துறை டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் டி.ஆர். பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது அவர் கூறுகையில், “திமுக ஆணைப்படி உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், காவல்துறையினர் அவர்களை பல மணி நேரம் காக்க வைத்து, கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பாஜகவை சேர்ந்தவர்கள் வேல் யாத்திரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் கைது செய்கிறார்கள். ஆனால், உடனடியாக விட்டுவிடுகிறார்கள். உதயநிதி ஸ்டாலினை பல மணி நேரம் காக்க வைக்கிறார்கள். கைது என்பது திமுகவுக்கு புதிதல்ல என்றாலும், அராஜக ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.


உதயநிதிக்கு நடக்கும் கொடுமைகளை பார்த்துக் கொண்டு எங்களால் சும்மா இருக்க முடியாது. அதனால்தான் டிஜிபியை சந்தித்துள்ளோம். இந்த விஷயத்தில் பாஜகவுக்கு ஒரு நியதி, திமுகவுக்கு ஒரு நியதியா? சென்னைக்கு அமித் ஷா வந்தபோது சமூக இடைவெளி என்கேயாவது பின்பற்றப்பட்டதா? எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் அதிமுகவினரால் கூட்டம் சேர்க்கப்படுகிறது. அப்போது சமூக இடைவெளி இல்லாமல்தான் இருக்கிறது. ஆனால், காவல்துறையினர் கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.  இந்த விஷயத்தில் நடவடிக்கை இல்லையென்றால், கூடி விவாதித்து முடிவு செய்வோம். தேர்தல் பரப்புரையை தடுப்பது சட்டப்படி குற்றம். தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம்.” என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

click me!