
கடந்த 24 நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் உத்தரவிட்டார். அதோடு, எஸ்.வி.கேகர் கருத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
எஸ்.வி.சேகர், கடந்த 24 நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவாரா என்று செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்ற உத்தரவை தலைவணங்கி நிறைவேற்றுவது அரசின் கடமை. எனவே எஸ்.வி.சேகர் மீது நீதிமன்ற வலியுறுத்தும் நடவடிக்கைகளை நிச்சயம் அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.
கடந்த 24 நாட்களாக தலைமறைவாக இருந்த எஸ்.வி.சேகர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல் துறை வேண்டுமென்றேதான் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்று பெண் நிருபர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு உயர்மட்ட செல்வாக்கால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஓழுங்கு நடவடிக்கை குழுவிற்கு நாங்கள் கடிதம் கொடுத்துள்ளோம். அது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து எங்களுக்குத் தகவல் கொடுப்பார்கள் அதன்பேரில் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.