வயசான பெத்தவங்களை ஒழுங்கா பாத்துக்கணும்…. இல்ல மகனே 6 மாசம் ஜெயில்லதான் ….

First Published May 13, 2018, 8:04 AM IST
Highlights
son take of their parents properly or 6 months jail


வயதான பெற்றோரை கைவிடுதல் மற்றும் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பது குறித்து மத்திய அரசு சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

வயதான பெற்றோரை பராமரிக்காமல் பிள்ளைகளே கைவிடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பெருகி வரும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையை பார்த்தாலே இந்த பிரச்சினையின் வீரியத்தை உணர முடியும்.

இப்படி முதுமையில் தள்ளாடும் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சட்டங்கள் அமலில் இருக்கின்றன. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரித்தல் மற்றும் நலச்சட்டம் 2007-ன் படி முதியோர் நலன் காக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் வயதான பெற்றோரின் இந்த வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. பெற்று வளர்த்த தங்கள் பிள்ளைகளே, முதுமை காலத்தில் துணையாக இல்லாமல் தள்ளிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு துன்பங்களையும் அந்த முதியவர்களுக்கு விளைவித்து விடுகின்றனர்.

இதை தடுக்கும் வகையில், வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி இத்தகையோருக்கு தற்போதைய 3 மாத சிறைத்தண்டனையை 6 மாதங்களாக அதிகரிப்பது குறித்து சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

இதற்காக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரித்தல் மற்றும் நலச்சட்டம் 2007-ஐ மறு ஆய்வு செய்து வரும் இந்த அமைச்சகம், இந்த சட்டத்தின் வரையறையை விரிவுபடுத்தவும் யோசித்து வருகிறது.

அதாவது வயதான பெற்றோரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, இதுவரை அவர்களது உயிரியல் ரீதியான பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் சில உறவுகளை உள்ளே கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள், சட்டப்பூர்வ காப்பாளராக நியமிக்கப்பட்ட சிறுவர்கள் ஆகியோரையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டுவர பரிசீலித்து வருவதாக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் வயதான பெற்றோருக்கான மாதாந்திர பராமரிப்பு செலவுத்தொகை உச்சவரம்பு ரூ.10 ஆயிரம் என்பதை கைவிட்டுவிட்டு, பிள்ளைகளின் வருமானத்துக்கு ஏற்றவாறு நிர்ணயிப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறிய அவர், முதியவர்களின் உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகளின் அடிப்படையில் மட்டும் பராமரிப்பு செலவை நிர்ணயிக்கக்கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் புதிய வரைவு மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும்  அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

click me!