தன்னை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது சூர்யாவுக்கு தெரியும்.. ஒரேபோடு போட்ட குஷ்பு.

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2021, 1:58 PM IST
Highlights

நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் இதுவரை சினிமாத்துறையில் பெரியளவில் அவருக்கு ஆதரவு தரவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்பு பதிலளித்த குஷ்பு அரசியலில் ஆயிரம் இருக்கிறது, யார் என்ன பேசினாலும் அதற்கெல்லாம் பதில்கூறிக்கொண்டிருக்க முடியாது. பாமகவினர் மிரட்டுகிறார்கள் என்றால் பாமகவினரிடம் போய் கேளுங்கள் என்றார்.

தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சூர்யாவுக்கு நன்கு தெரியும் என்றும், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டால் தான் அவருக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று அர்த்தமா? என்றும் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இதுவரை ஜெய்பீம் திரைப்படத்தை தான் பார்க்கவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து ஓடிடி இணையத் தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்..  இருளர் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் வேண்டுமென்றே வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் அவர்களின் அடையாள குறியான அக்னிசட்டி இடம்பெற்றுள்ளது என்றும், அதேபோல் வில்லனாக வரும் காவலருக்கு திட்டமிட்டு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்  என்றும் வலியுறுத்தி வருவதுடன்,  5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கினால் மட்டும் போதாது, சூர்யா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும், இல்லாவிட்டால் அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமகவினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் அசாதாரண சூழ்நிலையை எட்டியுள்ளது. சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை விடப்போவதில்லை என்று பாமகவினர் உறுதியாக இருந்துவரும் நிலையில் ஆங்காங்கே சூர்யாவை எதிர்த்து போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வகையில் நேற்று நடைபெற்ற ஓர் ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர்  சூர்யாவின் பேனரை செருப்பால் தாக்கி தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளனர். இதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது மெல்ல மெல்ல இந்த விவகாரம் வன்முறையை நோக்கி செல்வதை காணமுடிகிறது. இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட குஷ்பு அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெய்பீம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், தற்போதுவரை நான் ஜெய்பீம் திரைப்படத்தை பார்க்க வில்லை, எனவே அது குறித்து பதில் சொல்ல இயலாது என்றார். ஆனால் செய்தித்தாளில் படித்தவரை உண்மையாக பாதிக்கப்பட்ட பார்வதியிடம் முறையாக அனுபதி பெறாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பார்வதிக்கு எந்த உதவியும் சூர்யா செய்யவில்லை என்பது மட்டும் தெரியவந்தது என்றார். 

நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் இதுவரை சினிமாத்துறையில் பெரியளவில் அவருக்கு ஆதரவு தரவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்பு பதிலளித்த குஷ்பு அரசியலில் ஆயிரம் இருக்கிறது, யார் என்ன பேசினாலும் அதற்கெல்லாம் பதில்கூறிக்கொண்டிருக்க முடியாது. பாமகவினர் மிரட்டுகிறார்கள் என்றால் பாமகவினரிடம் போய் கேளுங்கள் என்றார். நீங்கள் சூர்யாவுக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்று கேட்டதற்கு, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டால்தான் சூர்யாவுக்கு ஆதரவு என்று அர்த்தமா என்றார். இந்த விவகாரத்தில் தன்னை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சூர்யாவுக்கு நன்றாகவே தெரியும் என்றார். சூர்யா எத்தனைபேருக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார், அவர் எத்தனை குழந்தைகளை படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும், எனவே சமூக வலைதளத்தில் யார் எது பேசினாலும் அதை எல்லாம் உடனே ட்ரெண்டாக்குவதை தவிர்க்க வேண்டும். என அவர் வலியுறுத்தினார். 
 

click me!