சசிகலாவை ஆதரிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.. ஓபிஎஸ்சை ஓங்கி அடித்த ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2021, 2:02 PM IST
Highlights

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியிருக்கிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ஓபிஎஸ் அவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது.

சசிகலா மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் இன்றும் என்றும் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் மீண்டும் இவ்வாறு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற உடன் அதிமுக ஓபிஎஸ்- இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் வந்தது. மீண்டும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் கட்சியில் சேர வாய்ப்பில்லை என அப்போதே அவர்கள் திட்டவட்டமாக கூறினர். ஆனால், சிறையிலிருந்து விடுதலையாகி வந்தவுடன் கட்சி கைப்பற்றும் நடவடிக்கையில் சசிகலா இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அரசியலை விட்டே ஒதுங்கி இருக்கப்போவதாக சசிகலா கூறியது அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையும் படியுங்கள்: அய்யோ.. தமிழக மக்களே உஷார்.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப ரொம்ப அலர்ட்டா இருங்க.

இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது தொண்டர்களை சந்திக்க போகிறேன் அரசியல் சுற்றுப்பயணத்தில் சசிகலா இறங்கியுள்ளார். அதிமுக கொடி கட்டப்பட்ட, முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அரசியல் சுற்றுப்பயணம் சென்றுள்ளார் சசிகலா. முன்னதாக ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்க அனைவரும் முன்வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார் சசிகலா, ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அதிமுகவில் சசிகலா இணைப்பிற்கு வாய்ப்பே இல்லை என மறுத்து விட்டனர்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், கட்சியில் சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என்றும், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்வதை மக்கள் முடிவு செய்வார்கள் எனக் கூறியிருந்தார். அவரின் கருத்து அதிமுகவில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும், ஜெயக்குமாரும் சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என கூறிய நிலையில் ஓபிஎஸ் கருத்து பூதாகரமாகியுள்ளது.இந்நிலையில் ஓபிஎஸ்சின் கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் ஓபிஎஸ் கூறியதில் என்ன தவறு இருக்கிறது என அதிமுக அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். 

மொத்தத்தில் கட்சி தலைமையின் தொளிவான முடிவுதான் என்ன என்ற பெரும் குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அது அனைத்திற்கும் விடை கொடுக்கும் வகையில் மீண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கு அதிமுகவில் இன்றும், என்றும் இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது,புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் தியாகத்தாலும் பல்வேறு தொண்டர்கள் சிந்திய இரத்தத்தாலும் வளர்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது எஃகு கோட்டை, இந்த எஃகு கோட்டையை எந்த கரையானலும் ஆளும் அழிக்க முடியாது,

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் பாஜகதான் எதிர் கட்சியா..? அண்ணாமலையை பங்கம் செய்த செல்லூர் ராஜூ.. பயங்கர எச்சரிக்கை.

மீண்டும் கட்சிக்குள் சசிகலாவை சேர்க்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை, இதுதான் கட்சியின் முடிவு, கட்சியில்  சசிகலா, அவரது குடும்பத்தினருடனும்  யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது, அப்படி தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுதான் கட்சி எடுத்த முடிவு, அதைதான் இப்போதும் நான் சொல்கிறேன். சசிகலா குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் நிச்சயம் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என திட்டவட்டமாகக் கூறினார். 

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியிருக்கிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ஓபிஎஸ் அவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்கு எதிராக நான் கருத்துச் சொல்ல முடியாது, ஒரு கட்சிக்குள் எதிர்கருத்து சொல்வது நல்லது அல்ல, ஆனால் கட்சியினுடைய கொள்கை என்ன? சசிகலா தொடர்பாக ஏற்கனவே கட்சியில் எடுக்கப்பட்டுள்ள முடிவு என்ன? அதை தான் நான் கூறுகிறேன் என ஜெயக்குமார் கூறினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து மீண்டும் அமைந்துள்ளது, மொத்தத்தில் அதிமுகவில் சசிகலா விவகாரத்தில் எழுந்துள்ள இரட்டை நிலைப்பாட்டால் தொண்டர்கள் மேலும் குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 

click me!