
தேர்தல் ஆலோசகர்களை நியமிக்கும் கட்சிகள்
தேர்தல்களின் போது வேட்பாளர்கள், வாக்களார்களை தேடிச்சென்று தங்கள் கட்சியின் வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகள் போன்றவற்றை எடுத்துரைத்து வெற்றி பெற்ற காலம் மலை ஏறி போய்விட்டது. ஒவ்வொரு கட்சியின் தேர்தல் நேரத்தில் தங்களுக்கு ஆலோசனை கூற அரசியல் ஆலோசகர்களை நியமிப்பது புது டிரென்டாக மாறி விட்டது. . பாஜகவில் பிரதமர் மோடி தொடங்கி, ராகுல்காந்தி, மம்தா, நித்திஷ்குமார், சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என பலரும் தேர்தல் நேரத்தில் ஆலோசனை கூற பல கோடி ரூபாய் கொடுத்து ஆலோசகர்களை நியமிப்பது புது ஸ்டைலாக மாறிவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக எதிர்கட்சியாக இருந்த போது ஆலோசனை வழங்குவதற்காக சுனில் என்பவரை திமுக தலைமை நியமித்தது. இவருடைய யோசனையில் உதயமானது தான் நமக்கு நாமே திட்டம். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் திமுகவை மக்களிடம் கொண்டு செல்ல உதவியாக இருந்தது. இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 39 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற சுனிலின் பங்கு முக்கியம் வகுத்தது.
திமுக- அதிமுகவில் சுனில்
இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில திமுகவிற்கு அரசியல் ஆலோசனை வழங்க மு.க.ஸ்டாலின் வீட்டில் உள்ள மேலிடம் பிரசாந்த் கிஷோரை நியமிக்க முடிவு செய்தது. பிரசாந்த் கிஷோரும், சுனிலும் இணைந்து திமுகவிற்கு பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத சுனில் திமுகவிற்கு தேர்தல் பணியாற்றாமல் விலகினார். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக சுனில் பணியாற்றினார். இவரது ஆலோசனையின் கீழ் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சி ஆலோசனை குழுவில் சுனில்
இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றுமாறு பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டது. இதனை ஏற்றுக்கொண்டு தேர்தலுக்கு தயாராக காங்கிரஸ் கட்சியில் எடுக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை காங்கிரஸ் தலைமையிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கினார். இதனையடுத்து கட்சியில் இணைந்து பணியாற்றுமாறு காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டது. இதனை பிரசாந்த் கிஷோர் ஏற்றுக்கொண்டாலும் தான் மட்டுமே தேர்தல் பணிகுழுவில் இருப்பேன் என தெரிவித்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கருத்து ஒத்துவராத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வியூகங்கள் அமைக்க குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளோடு சுனிலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 42 வயதே ஆன சுனில் இதுவரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என 14 தேர்தல்களில் பணியாற்றி அனுபவம் உள்ளது. இந்த அனுபவம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அரசியில் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.