
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும், பெங்களூரு பரப்பன அக்கிரகார சிறையில் இருந்தாலும், வெளியில் நடமாட முடியாத ஒரு விஷயத்தை தவிர அனைத்து வழக்கம் போல நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சிறையில் இருந்து கொண்டே கட்சியையும், ஆட்சியையும் சசிகலா இயக்கி கொண்டிருக்கிறார். சுதாகரன் உள்ளிட்ட அவரது குடும்ப உறவுகள் அனைவரும், அனைத்து டெண்டர்களையும் பெற்று, கோடிக்கணக்கில் குவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதேபோல், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கும், தம்பிதுரைக்கும் நெருக்கமான தொழிலதிபர் ஹேம்நாத் வீட்டில் இருந்து, சசிகலா உள்ளிட்ட மூவருக்கும், மூன்று வேளையும், அவர்களுக்கு தேவையான, விருப்பமான உணவுகளும் சிறைக்கு சென்றுகொண்டுதான் இருக்கின்றன.
அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஹேம்நாத், வேளாண் கல்லூரிக்காக தம்பிதுரைக்கு 150 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த நன்றி கடனுக்காக, கடந்த தேர்தலில், வேப்பனஹள்ளி தொகுதியில், அவருக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுத்துள்ளார் தம்பிதுரை. ஆனாலும் ஹேம்நாத் தோற்றுவிட்டார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தினமும் சந்தித்து வரும், இளவரசி மகன் விவேக், அதே சிறையில் இருக்கும் சுதாகரனை சந்தித்த போது, சோலார் பேனல் லைட் டெண்டர் தமக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதை, சசிகலாவிடம் விவேக் சொல்ல, அவர்கள்தானே தமிழகம் முழுக்க சோலார் பேனல் லைட்டை சப்ளை செய்து வருகிறார்கள். இப்போது என்ன ஆச்சு?. டெண்டர் எல்லாம் வேண்டாம், வழக்கம் போல சப்ளை செய்ய சொல். மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்று விவேக்கிடம் அவர் சொல்லி இருக்கிறார்.
சோலார் பேனல் லைட் வெளி மார்க்கெட்டில் 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிவரும் நிலையில், 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கு அதை சப்ளை செய்து வருகிறது சுதாகரன் குடும்பம்.
ஒரு லைட்டுக்கு 4 ஆயிரத்து 500 வீதம் கூடுதலாக சம்பாதிக்கும் சுதாகரன், கடந்த வருடங்களில், தமிழகம் முழுவதும் எத்தனை லைட்டுகள் சப்ளை செய்திருப்பார். அதன் மூலம் அவர் எந்த அளவுக்கு கொள்ளை லாபம் சம்பாதித்திருப்பார். அதுவும் அதிகாரிகள் உள்ளிட்ட யாருக்கும் ஒரு பைசா கூட கமிஷன் கொடுப்பதில்லை.
உண்மையில் சொல்லப்போனால், பேருக்குத்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் தமிழகத்தில் நடப்பது அவர்களுடைய ஆட்சிதான்.
எல்லா டெண்டர்களுமே பெங்களூரு சிறையில் இருந்துதான் தீர்மானிக்கப்படுகிறது என்கின்றனர் அதிகாரிகள்.