திடீர் திருப்பம்.... கடைசி கட்டத்தில் திமுகவுடன் தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை..? அறிவாலயத்தில் திகுதிகு..!

By Asianet TamilFirst Published Mar 12, 2021, 8:25 AM IST
Highlights

திமுகவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு தாமதம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
 

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக, போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர் பட்டியலையும் 10-ஆம் தேதியே வெளியிட திமுக முடிவு செய்திருந்தது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி ஏற்பட்டதால், அறிவித்தப்படி திமுகவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியவில்லை. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு நேற்று அனைத்து கட்சிகளுடனும் உடன்பாடு ஏற்பட்டது. கடைசியாக சிபிஎம் போட்டியிடும் தொகுதி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
திமுக பட்டியல் தயாராக இருந்த நிலையில், சிபிஎம் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பிறகு திமுக போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர் பட்டியலையும் அறிவித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு திமுக எதையும் அறிவிக்கவில்லை. மேலும் நேற்று மகா சிவராத்திரி என்பதால் திமுக வேட்பாளர் பட்டியல் என்று கட்சியினர் காத்திருந்தனர். ஆனாலும், திமுக அறிவிப்பு எதையும் வெளியிடாததால், அது திமுக தொண்டர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுகவுடன் ஒரு கட்சி கடைசி கட்டத்தில் கூட்டணி ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் அறிவாலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அது வேறு எந்தக் கட்சியும் அல்ல, கேப்டனின் தேமுதிகதான். அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக, அதிமுகவுக்கு எதிராக கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. தங்களை அவமானப்படுத்திய அதிமுகவை பழி வாங்க வேண்டும் என்றும் அக்கட்சி பேசிவருகிறது. அதற்கு திமுக கூட்டணிதான் சரியாக இருக்கும் என்றும் அக்கட்சி கருதுகிறது. ஒரு பக்கம் அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தியவேளையில், இன்னொரு பக்கம் திமுகவுடன் திரை மறைவில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவாலயத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதிஷ், மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் பேசிவருவதாக தகவல்கள் உலா வருகின்றன. 10 தொகுதிகள் கொடுத்தால்கூட போதும் என்று திமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். இதன் காரணமாகவே திமுக போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர் பட்டியலையும் அறிவிக்காமல் தாமதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் கடைசி நேரத்தில்கூட புதிய கூட்டணி உருவாகியிருக்கிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை என்ற தத்துவம் இருக்கும்வரை எது வேண்டுமானாலுன் நடக்கலாம்.! 

click me!