
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு திடீரென சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வருகை புரிந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவில் 73வது பிறந்த நாளில் சசிகலாவை தனது மனைவி ராதிகாவுடன் இணைந்து சந்தித்தார் சரத் குமார். அப்போது பத்து ஆண்டுகளான சசிகலாவை எனக்குத் தெரியும். அவர் குடும்பத்தில் ஒருவராக என்னுடன் பழகினார். எனக்கு கொரோனா தொற்று பரவியிருந்து அதிலிருந்து மீண்டேன். அவரும் கொரோனா தொற்று பாதித்து மீண்டார். அந்த நோய்த்தொற்றின் வீரியம் எனக்குத் தெரியும். ஆகையால்,சசிகலாவை பார்த்து நலம் விசாரிக்க வந்தேன்’’ எனத் தெரிவித்தார். அப்போது அமமுகவுடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு சரத்குமார் வருகை தந்துள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலில் ஐ.ஜே.கே. – சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சரத்குமாருடன் ஐ.ஜே.கே.பொதுச்செயலாளர் ரவி பாபுவும் கமல் ஹாசனை சந்தித்து பேசி வருகின்றனர். இதனால், மூன்றாவது கூட்டணி தமிழகத்தில் ஏற்படலாம் என்கிற சூழல் உருவாகி இருக்கிறது.