அதிமுக அவைத்தலைவர் பதவியில் திடீர் திருப்பம்... எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ் செம மூவ்..!

By Thiraviaraj RMFirst Published Aug 9, 2021, 11:33 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் புதிய அவைத்தலைவருக்கான ரேஸில் இருப்பதாக தெரிகிறது.
 

அதிமுகவின் புதிய அவை தலைவராக நியமிக்கப்பட உள்ளவர் யார் என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் புதிய அவைத்தலைவருக்கான ரேஸில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் புதிய திருப்பமாக அதிமுகவில் காலியாக உள்ள அவைத்தலைவர் பதவிக்கு இஸ்லாமியர் ஒருவரை நியமிக்கலாம் என கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக அவைத் தலைவர் பதவி என்பது அக் கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டங்களை வழிநடத்தக் கூடிய மிகப் பெரிய அதிகாரம் பெற்ற ஒரு பதவியாகும். மேலும் வேட்பாளர் நேர்காணல் மற்றும் தேர்வின் போதும் அதிமுக தலைமையுடன் ஒன்றாக அமர்ந்து வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரமும் அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத் தலைவராக இருந்து வந்த மதுசூதனன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதன் காரணமாக அந்த பதவி காலியாக உள்ளது. இந்த பதவியை கைப்பற்ற அதிமுக தரப்பில் பல்வேறு சீனியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதில் குறிப்பாக அதிமுக அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் அதிமுக கட்சியின் முக்கிய புள்ளிகளான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, ஜெயக்குமார், அன்வர் ராஜா மற்றும் தமிழ் மகன் உசேன் போன்றவர்கள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே அதிமுகவில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்பட அதிமுக தலைமை முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக காலியாக உள்ள அவைத் தலைவர் பதவிக்கு எம்ஜிஆர் காலத்து சீனியரும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருக்கும் நெருக்கமான தமிழ்மகன் உசேன் என்பவரை நியமிக்கலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இஸ்லாமியர் ஒருவருக்கு அதிமுகவில் உயர்பதவியை கொடுப்பதன் மூலமாக திமுகவுக்கு எதிரான அரசியல் ஆட்டத்தை நடத்தலாம் என அதிமுக தலைமை யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்ற முறையில் இவர்கள் இருவராலும் அதிமுக அவைத் தலைவரை நியமிக்க முடியுமா என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

click me!