
கரூரில் விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் 33 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கரூர் நகரமே சோகத்தில் மூழ்கியது. 6 குழந்தைகள், 17 பெண்கள், 10 ஆண்கள் என 31 பேரும் உயிரிழந்த நிலையில் தான் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சென்றடைந்த விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதே இவ்வளவு பெரிய துயரத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மயக்கமடைந்தவர்களுடன் ஆம்புலன்சில் வந்த பெண் ஒருவர் கூறுகையில், “எல்லாரும் இடைவெளியில்தான் நின்று கொண்டு இருந்தார்கள். அப்போது கரண்ட் கட் பண்ணிட்டாங்க. அப்போ விஜய் பேசுவது எதுவும் கேட்கவில்லை. அதனால் எல்லாரும் முன்னாடி போனால் விஜய் பேசுவது கேட்கும் என்று முண்டியடித்துப் போக ஆரம்பிச்சிட்டாங்க. அதுனால நெரிசல் ஏற்பட்டு அப்பவே மயக்கமடைந்தனர்” எனக் கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் போதிய தடுப்பு வேலிகள், தனி நுழைவு-வெளியேறும் வாயில்கள் இல்லாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மக்கள் அதிகம் திரண்டதால் இடத்தில் காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத்திணறல் அதிகரித்தது. பெரிய அளவிலான கூட்டத்தில் தண்ணீர் விநியோகம் மற்றும் உடனடி மருத்துவ வசதி ஏற்பாடு போதாமையாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உரையாடல் முடிந்ததும் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டதால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.