
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியபோதும், சசிகலா-தினகரன் தரப்புக்கு ஆதரவளித்துவருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
இரட்டை இலை விவகாரத்திலும் கூட சின்னம் சசிகலா தரப்புக்குத்தான் ஒதுக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் நடந்த சமயத்தில், தமிழர்கள் தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என டுவீட் செய்திருந்தார். அவர் சார்ந்திருக்கும் பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தபோதும் கூட தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என வெளிப்படையாக டுவீட் செய்திருந்தார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து, அக்கட்சியின் தமிழக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றவுடன் அவருக்கு சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு தினகரன் டுவிட்டரின் நன்றி தெரிவித்தார்.
தினகரன் நன்றி தெரிவித்து பதிவிட்ட டுவீட்டிற்கு பதிலளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, தினகரனின் சாதி பெயரை குறிப்பிட்டு, அந்த குறிப்பிட்ட சாதியினர் வலிமையான இந்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
சாதிப்பெயரை சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேசிய கட்சியின் மூத்த தலைவராக இருந்துகொண்டு சாதிப்பெயரை சமூக வலைதளத்தில் அப்பட்டமாக பதிவிட்டிருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.