
மதுரை மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நிறுத்தப்பட்டுள்ளார். அமமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுகிறார். வேட்பாளர் அனைவரும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்துவருகின்றனர்.
மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், கடந்த முறை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர், பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர் என்பதன் அடிப்படையில் தொகுதியில் ஏற்கனவே அறிமுகமானவர். நாள்தோறும் அதிகாலையிலேயே எழுந்து நடை பயிற்சி செல்லும் வெங்கடேசன், வழியிலேயே பார்க்கும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை மதுரை ரேஸ் கோர்ஸ் அருகேயுள்ள பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் வெங்கடேசன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பூங்காவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நடைபயிற்சி மேற்கோண்டார்.
அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். அமைச்சரிடம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வெங்கடேசன் வாக்கு கேட்க, அமைச்சரும் சிரித்தபடி தேர்தல் வெற்றிபெற வாழ்த்துகள் கூறினார்.
எதிரெதிர் வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது நாகரீகமாக கை குலுக்கிக் கொள்வதும், வெற்றி பெற வாழ்த்துவதும் ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. அத்தகைய நாகரீகம் இங்கு அரங்கேறியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.