மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து !! தமிழக அரசுக்கு ஓங்கி குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!!!

First Published Sep 6, 2017, 7:22 AM IST
Highlights
student valarmathi case...high court release her from Gundas act


பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 12-ஆம் தேதியன்று சேலத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரி அருகே வளர்மதி என்ற மாணவி துண்டுப் பிரசுரம் ஒன்றை அங்கு வந்த மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொடுத்துவந்தார்.

இயற்கைப் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் அச்சிடப்பட்டிருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தில் 'நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுடன் கரம்கோர்ப்போம்' என்ற தலைப்பில் டெல்டா பகுதியில் செயல்படுத்தப்பட்டுவரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி கோரப்பட்டிருந்தது.

வளர்மதி துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது, அவரையும் அவருடன் இருந்த ஜெயந்தி என்ற பெண்ணையும் சேலம் கன்னங்குறிச்சி காவல்துறையினர் கைதுசெய்தனர். வளர்மதி மீது அரசுக்கு எதிராக கலகம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

வளர்மதி மீது மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு விவகாரங்களில் போராடியது தொடர்பான வழக்குகள் இருக்கின்றன. ஆகவே அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாநகர ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார்.

வளர்மதி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து அவருடைய தந்தை மாதையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஒருவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படும்போது அவருடைய பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்; அதனைக் காவல்துறை முறைப்படி செய்யவில்லை என்று மாதையன் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது என்று கூறியுள்ளது. இதையடுத்து இன்றோ அல்ரது நாளையோ வளர்மதி விடுதலை செய்யப்படுவார் என எதிர்பாக்கப்படுகிறது.

வளர்மதி பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இதழியல் படித்துவந்தார். இந்த வழக்கிற்குப் பிறகு பல்கலைக்கழகத்திலிருந்து வளர்மதி இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

click me!