முதல்வரே இனியும் தாமதிக்காதீங்க! கள்ளச்சாராய புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்! TTV.தினகரன் ஆவேசம்!

By vinoth kumar  |  First Published May 15, 2023, 7:59 AM IST

டாஸ்மாக் மதுவிற்பனை, போதை பொருட்களின் புழக்கம் ஆகியவற்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கும் இந்த சூழலில் கள்ளசாராய விற்பனையும் சேர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் ஏராளமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர். அதில் 16 பேருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். 

Latest Videos

இதையும் படிங்க;- அம்மா இருந்திருக்கணும்.. திமுக ஆட்சியையும், கள்ளச்சாராயத்தையும் பிரிக்க முடியாது - வெளுத்து வாங்கிய சசிகலா

இதில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த அமரன் என்பவரைப் போலீசார் கைது செய்ததுடன், மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கள்ளசாராயம் குடித்து 7  பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளசாராயம் குடித்து ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தை ஒட்டிய ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி மாநில எல்லை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் தாராள கள்ளச்சாராய புழக்கத்திற்கு காரணமாக எல்லைகளில் பணியாற்றும் மதுவிலக்கு போலீசார் வியாபாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு விற்பனையை ஊக்குவிப்பதே என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க;- கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!!

ஏற்கனவே TASMAC மதுவிற்பனை, போதை பொருட்களின் புழக்கம் ஆகியவற்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கும் இந்த சூழலில் கள்ளசாராய விற்பனையும் சேர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கள்ளச்சாராய புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துவதோடு இதை கவனிக்க தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!