Jai bhim நீங்க ட்விட்டர்லயும், ஃபேஸ்புக்லயும் மட்டும் கதறிக்கிட்டே இருங்க... ஜெய் பீம் லெவலே வேற மக்கா..!

By Thiraviaraj RMFirst Published Nov 21, 2021, 3:38 PM IST
Highlights

தமிழ் சினிமா சமகால சமூகத்தையும், அரசியலையும் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் குறிப்பட்ட சமூகத்தையும் பாதிக்கிறது. இந்திய சமூக-அரசியல் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் இந்த யதார்த்தத்தை ஹிந்தி சினிமாவில் உருவாக்க முடியாது.

தமிழ் திரையுலகம் தரமான படைப்புகளால் இந்திய அளவில் கொடி நாட்டி வருகிறது. சூர்யா நடித்த ஜெய் பீம் ஐஎம்டிபியில் உலகளாவிய தரவரிசையில் முன்னணியில் இருப்பது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை. தி காட்பாதர் படத்தையெல்லாம் சர்வசாதாரணமாக கடாசி தள்ளி இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. 

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஜெய் பீம் போல தமிழ் சினிமாவில் இருந்து ஒரு படம் வெளிவரவில்லை. இந்தப்படம் தமிழ் சினிமாவின் மகுடம் என போற்றுகின்றனர் பலரும். இந்தப் படம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்தத் திரைப்படம் இந்திய சமூக வாழ்வின் எளிமையான மக்களின் கடுமையாக போராடி வெல்லும் யதார்த்தங்களைச் சித்தரித்துள்ளது. அதிகாரவர்க்கங்களின் ஆணவ உண்மையை தோலுரித்து காட்டியுள்ளது. 

குறிப்பாக சாதி அமைப்பின் கொடூரங்கள் மற்றும் அதற்கு ஒடுக்கப்பட்ட தலித், பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை பாயுச்சியுள்ளது. அட்டகத்தி (2012), மெட்ராஸ் (2014), கபாலி (2016), காலா (2018), சர்பத்த பரம்பரை (2021) போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். வெற்றிமாறனின் அசுரன் (2019); பரியேறும் பெருமாள் (2018) மற்றும் கர்ணன் (2021) மாரி செல்வராஜ் இவற்றையெல்லாம் தாண்டி இப்போது ஜெய் பீம் ஒரு புதிய சகாப்தத்தை  உருவாக்கியுள்ளது.

இந்தி, பெங்காலி சினிமாவில் உள்ள அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்களும் ஆதிக்க சாதி பின்னணியில் இருந்து வந்தவர்கள். அதேசமயம் தமிழில் ஆதிக்க சக்தியினர் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட படங்களை தயாரிக்க முன் வரும் தயாரிப்பாளர்களும், முன்னணி நட்சத்திரங்களும் முன்வருவது இந்திய அளவில் மூக்கில் விரலை வைக்க செய்துள்ளது. 

மிகப் பெரிய திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரே கூட, பெரும்பாலும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த முன்னணிக் கதாநாயகர்களைக் கொண்டிருந்தார். தமிழில் காலா, அசுரன், பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களில் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களை மையமாக வைத்து கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. 

ஜெய் பீமில் கூட, பழங்குடி கதாநாயகர்கள் ஊமையாகவும் சாந்தமாகவும் இல்லை. குறிப்பாக செங்கேனி என்ற கர்ப்பிணி இருளர். இப்போது தமிழ் சினிமாவில் புதிய அலை ஏற்பட்டுள்ளது. மிகவும் வலுவான அம்பேத்கரியம், பெரியாரியம் மற்றும் பௌத்த மத கருத்துக்களை கொண்டுள்ளன. குறிப்பாக வெற்றி மாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களில் இந்த முழக்கங்கள் ஆழமாக வெளிப்படுகின்றன. ஜெய் பீம் படத்தின் பெயரே அம்பேத்கரிய முழக்கம். படத்தில் அம்பேத்கர் மற்றும் புத்தரின் படங்கள், மேற்கோள்கள், சிலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் 1970களின் திராவிட இயக்கத்தை பிரதிபலித்தது.

தமிழ் சினிமா சமகால சமூகத்தையும், அரசியலையும் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் குறிப்பட்ட சமூகத்தையும் பாதிக்கிறது. இந்திய சமூக-அரசியல் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் இந்த யதார்த்தத்தை ஹிந்தி சினிமாவில் உருவாக்க முடியாது.

எனவே புதிதாக தலையெடுத்து வரும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நிகழ்வையும் அதன் அபிலாஷைகளையும் ஹிந்தித் திரையுலகம் முற்றிலும் தவறவிட்டது. அங்கே அது வனிக்காமல் போனதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. அதேவேளை, தமிழ் சினிமா, காலா, அசுரன், கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம், அவர்களின் வாழ்வியலை வெளிக்காட்டி வருகிறது. 

தமிழ் சினிமாவில் இந்த மாற்றம் எல்லாம் ஒரு பத்தாண்டு கால இடைவெளியில் தான் நடைபெற்று வருவது ஆரோக்கியமான விஷயமே. ஆனாலும் ஜெய்பீம் திரைப்படம் அதிவேக பாய்ச்சலுக்கு வித்திட்டு இருக்கிறது. வெல்டன் சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல்... நீங்கள் பற்ற வைத்தை ’அக்கினி’ இந்தியா முழுவதும் ’கலசமாக’ ஜொலிக்கிறது..!

click me!