
வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் உருவாக்கம், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்களை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மறுபுறம் ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 1,431 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு மாநில அரசுகள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் சூழலில், அதனை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.மேலும், கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும். வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கிராமப்புறங்களில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவும், மாவட்ட, தாலுகா அளவில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை அமைக்கப்பட்ட சிகிச்சை மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதார வசதிகளிலும் தேவையான மருத்துவப் பொருட்கள், ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருந்துகள் போதுமான அளவு கிடைப்பதை மாநிலங்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.