
இன்று விடிந்ததில் இருந்து தமிழகத்தை ‘ரெய்டு’ சூறாவளி போட்டுப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. ரெய்டுக்குள்ளாகி கொண்டிருக்கும் தினகரன் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த ரெய்டு பற்றி வாய் திறந்துவிட்டனர். இந்நிலையில் தி.மு.க.வின் செயல்தலைவர் பேசாவிட்டால் எப்படி?! தூங்குமா தமிழகம்?
இந்த ரெய்டு குறித்து ஸ்டாலின் கருத்துக்களைக் கூறுகையில்...
“இதுவரைக்கும் எத்தனையோ ரெய்டுகளை நடத்திட்டாங்க ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்கலையே? அப்போ இந்த ரெய்டால் மட்டும் என்ன நடக்க இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு, மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் வீட்டில் ரெய்டு, மாஜி அ.தி.மு.க. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு, முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகன்ராவ் வீட்டில் ரெய்டு, குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவரது ஏகப்பட்ட சொத்துக்களிலும் தொடர்ந்து ரெய்டுகள், குட்கா பிரச்னையில் சிக்கிய போலீஸ் அதிகாரியின் வீட்டில் ரெய்டு என்று ஏகப்பட்ட ரெய்டுகள் இதுவரையில் நடந்திருக்கிறது.
ஆனால் இதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க இதுவரையில்? வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாலோ அல்லது வருமான வரி கட்டாததாக தகவல் வந்ததால்தானே ரெய்டு நடத்துறாங்க. அப்போ அந்த ரெய்டுக்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க!
கன்னித்தீவு மாதிரி ரெய்டு சம்பவங்கள் மட்டும் இழுத்துட்டே போகுது. இந்த முறையாவது இது பற்றிய முழுமையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அமைச்சகம் தரவேண்டும், விளக்க வேண்டும். என்கிட்ட இந்த கேள்வியை கேட்கிற நீங்க சம்பந்தப்பட்ட துறையிடமும் கேட்கணும்.” என்று செய்தியாளர்களுக்கு அஸைன்மெண்ட் கொடுத்தார்.
பேசிவிட்டு காரை நோக்கி நகர்ந்தவரிடம் ‘ இந்த ரெய்டுக்கு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்குதா?’ என்று மீடியாவினர் கேட்க, ‘இதை பற்றி நீங்க என்ன நினைக்குறீங்கன்னு சொல்லுங்க, அப்புறம் நான் சொல்றேன்’ என்று மீடியாக்காரர்களை செயல்தலயே பேட்டி எடுத்து மெர்சலாக்கி இருக்கிறார்.
என்னவோ போங்க தல!