
சசிகலாவின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில் இருந்தே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளராரும், கர்நாடக மாநிலம் அதிமுக செயலாளருமான புகழேந்தி வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புகழேந்தி வீட்டுக்கு 11 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வருகின்றனர். இது குறித்து புகழேந்தி ஆதரவாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இந்த சோதனையை டிடிவி தினகரன் அணிக்கான பயமுறுத்தலாக பார்க்க முடியாது என்றும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கான பயமுறுத்தலாகவே இது பார்க்கப்பட வேண்டும் என்றார்.
வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புகழேந்தி குடும்பத்தினர் முறையாக பதிலளித்து வருவதாகவும், புகழேந்தியிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறினார்.
புகழேந்தி வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வரும் வேளையில், கர்நாடகாவில் உள்ள அதிமுக அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்று மாலை வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.