பெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..? கண்ணீருடன் கலங்கிய ஸ்டாலின்..!

By Manikandan S R S  |  First Published Mar 7, 2020, 9:36 AM IST

அப்பா மறைந்த போது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன் ?
பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன், இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன் ? இனி யாரிடம் பாராட்டுப் பெறுவேன் ? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன் ?


திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கவலைக்கிடமாக இருந்த அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரும் கடும் சோகத்தில் இருக்கின்றனர். 43 ஆண்டுகாலம் திமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் மறைவுக்கு என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன் எனதிமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் கவிதை எழுதியுள்ளார். அதில், 

இனமான இமயம் உடைந்துவிட்டது, எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்
என்ன சொல்லி தேற்றுவது எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை ?
பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர், முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்
எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர், என்ன சொல்லி என்னை நான் தேற்றிக் கொள்வது ?
தலைவர் கலைஞர் அவர்களோ என்னை வளர்த்தவர், பேராசிரியர் பெருந்தகையோ என்னை வார்ப்பித்தார்
எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்
இந்த நான்கும்தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது

எனக்கு அக்காள் உண்டு. அண்ணன் இல்லை, பேராசிரியர்தான் என் அண்ணன்என்றார் தலைவர் கலைஞர்
எனக்கும் அத்தை உண்டு பெரியப்பா இல்லை பேராசிரியப் பெருந்தகையையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன்
அப்பாவைவிட பெரியப்பாவிடம் நல்லபெயர் வாங்குவதுதான் சிரமம் ஆனால் நானோ பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழபட்டேன்
அவரே என்னை முதலில், கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர் என்று அறிவித்தார்
எனது வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைகிறது
அப்பா மறைந்த போது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்

இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன் ?
பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன், இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன் ?
இனி யாரிடம் பாராட்டுப் பெறுவேன் ? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன் ?
பேராசிரியப் பெருந்தகையே நீங்கள் ஊட்டிய இனப்பால் - மொழிப்பால் - கழகப்பால் - இம்முப்பால் இருக்கிறது
அப்பால் வேறு என்ன வேண்டும்? உங்களது அறிவொளியில் எங்கள் பயணம் தொடரும்
பேராசிரியப் பெருந்தகையே,
கண்ணீருடன்
மு.க.ஸ்டாலின்

இவ்வாறு ஸ்டாலின் தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!