இந்த ஒற்றை செய்தி கேட்டு உடைந்துபோன ஸ்டாலின்..!! சொல்லொணாத் துயரம் என உருக்கம்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2020, 12:01 PM IST
Highlights

பெண்களின் மீது ஆசிட் வீசும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் தண்டனை அளிக்கும் திருத்தங்களைப் பரிந்துரைத்தவர்.

தமிழ்நாட்டில் நகரத்தார் அதிகம் வாழும் தேவகோட்டையிலிருந்து டெல்லி செங்கோட்டை வரை சென்று, உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய,  முன்னாள் நீதியரசர் திரு. ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்:- 

நீதியரசர் திரு. ஏ.ஆர். லட்சுமணன் மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த அவர், கேரளா உயர்நீதிமன்றத்திலும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி - இந்திய நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியானவர். சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய சாதனையாளர். பதினெட்டாவது இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த அவர், தமது மூன்றாண்டுப்  பதவிக் காலத்தில் - 33 'சட்டக் கமிஷன் அறிக்கைகளை' மத்திய அரசுக்கு அளித்த ஒரே ஆணையத் தலைவர் என்ற சாதனையை, ஆணைய வரலாற்றில் உருவாக்கியவர்.இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப் பாடுபட்ட அவர்- பெண்களுக்குச் சம சொத் துரிமை வழங்கும் இந்து வாரிசுரிமைச் சட்டத்திலும், இந்திய வாரிசுரிமைச் சட்டத்திலும் திருத்தங்கள் பல கொண்டு வரப் பரிந்துரைகள் செய்தவர். 

பெண்களின் மீது ஆசிட் வீசும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் தண்டனை அளிக்கும் திருத்தங்களைப் பரிந்துரைத்தவர். “இந்தி மொழியை உச்சநீதிமன்றத்தில் கட்டாயமாக்கினால், நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படும். ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறுவது அரசியல் மற்றும் சட்ட ரீதியான அமைதியின்மையை நாடு முழுவதும் ஏற்படுத்தும். எந்த மொழியும் எவர் மீதும் திணிக்கப்படக்கூடாது” -என்ற பொன்னான- உறுதிமிக்க வரிகள் அடங்கிய 216-வது சட்டப் பரிந்துரை அறிக்கையை அளித்து,   "உச்சநீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது” என்று, டெல்லியில் அமர்ந்து கொண்டு நெஞ்சுயர்த்திப் பரிந்துரைத்தவர். தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான, “சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைய வேண்டும்” என்பதற்கு ஆதரவாக,  "229 சட்ட ஆணைய அறிக்கையை” அளித்து- மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியவர். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றக் குழுவில் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்று, தமிழ்நாட்டின் நதி நீர் உரிமைகளை நிலை நாட்டியவர்.

 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவர்; சந்திக்கும் போதெல்லாம், அவர் இவர் மீதும்- இவர் அவர் மீதும் என, பாச உணர்வுகளைப்  பொழிந்து மகிழ்ச்சி கொண்டவர்கள்.நேற்றைய தினம் அவரது துணைவியார் திருமதி. மீனாட்சி ஆச்சி அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு, அவருக்கு ஆறுதல் சொல்ல தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது- அவர் தன் துணைவியாரை இழந்த சோகத்திலிருந்து  மீள முடியாமல் இருப்பதை என்னால் உணர முடிந்தது. தனது துணைவியார் மறைந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மறைந்திருப்பது, இதயத்தை நொறுங்கிப் போக வைக்கிறது. முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்கள் மறைந்த போது எனக்கு ஆறுதல் கூறியவர். அவருக்காக நடைபெற்ற “நீதிபதிகள் நினைவேந்தல்” நிகழ்ச்சியில் பங்கேற்று “கலைஞர் பன்முகத்தன்மை கொண்ட தலைவர்” என்று மனதாரப் பாராட்டி மகிழ்ந்தவர். அந்தப் பெருந்தகையாளர் இன்று இல்லை; அவர் மறைவில் நான் மனமுடைந்து தவிக்கிறேன்.

ஒரே நேரத்தில் தன் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்து துயரத்தில் மூழ்கியுள்ள- அவரது புதல்வர், மூத்த வழக்கறிஞர் திரு. ஏ.எல்.சுந்தரேசன் அவர்களுக்கும்- மறைந்த நீதியரசரின் குடும்பத்தினர் அனைவருக்கும், உறவினர்களுக்கும், அவரோடு பணியாற்றிய நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!