தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை: ஏழை மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2020, 10:52 AM IST
Highlights

இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ  பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் கீழ் இருப்பவர்கள் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை பெற இன்று முதல் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன.

நிகழாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இணையதளம் வழியாக பெற்றோர் வீட்டிலிருந்து விண்ணப்பிக்கலாம், மேலும் முதன்மை கல்வி அலுவலகம் மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களிலும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது புகைப்படம், பிறப்பு சான்று அல்லது பிறப்பு  சான்றிதழுக்கான ஆவணம், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் தரப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், சாதிச் சான்றிதழ் ஆகியவைகளுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ  பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், பெற்றோர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம், பள்ளியிலும் நிர்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்படுவார்கள். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள், ஆகியோரிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதேபோல் தனியார் பள்ளிகளின் பட்டியல் மற்றும் அதில் உள்ள இடங்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. 

click me!